Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆதியோகி முன்னாடி ஈஷா கிராமோத்சவம் பைனல்ஸ் விளையாட ஆசை - கூக்கால் கிராமத்து இளைஞரின் கனவு!

கோவை: கூக்கால் கிராமம், சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் பலருக்கும் பரீட்சையமான இடம். சுற்றுலா சார்ந்த தகவல்களையும் பயண அனுபவங்களையும் புது இடங்களையும் பகிரும் ‘டிராவல் வீ-லாகர்ஸ்’ மூலம் இந்த கிராமம் பிரபலமானது. இயற்கை அழகு கொட்டிக் கிடக்கும் கூக்கால் கிராமத்து இளைஞரின் ஆசையை விவரிக்கிறது இந்தக் கட்டுரை.

விளையாட்டு மூலம் கிராம மக்கள் மத்தியில் உற்சாகம், கொண்டாட்டம், ஈடுபாடு, ஒற்றுமை, உடல் உறுதி மற்றும் ஆரோக்கியம் ஆகியவற்றை உருவாக்கும் நோக்கில், சத்குருவின் ஈஷா அறக்கட்டளை ஆண்டுதோறும் கிராம மக்களுக்கான விளையாட்டுத் திருவிழாவை ஈஷா கிராமோத்சவம் என்ற பெயரில் நடத்தி வருகிறது. அடிப்படையாக மக்களின் தினசரி வாழ்க்கையில் விளையாட்டை ஒரு அங்கமாக கொண்டு வர வேண்டும் என்ற நோக்கில் இந்த கிராமோத்சவம் நடத்தப்படுகிறது.

இந்த ஈஷா கிராமோத்சவ விளையாட்டுப் போட்டிகளில் கடந்த 3 வருடங்களாக விளையாடி வரும் மணி என்ற கூக்கால் கிராமத்து இளைஞர் இது குறித்து நம்மிடம் கூறுகையில், “கொடைக்கானலில் இருந்து 48 கிலோ மீட்டர் தாண்டி கூக்கால் ஊராட்சியைச் சேர்ந்தவன் நான். கொடைக்கானல் சுற்றுவட்டாரத்துல ஒரு ஊருக்கு 3 டீம் இருக்கு. 4 வயசுல இருந்து நான் வாலிபால் விளையாடுறேன்.

திண்டுக்கல் சின்னாளப்பட்டியில பிளஸ் 2 முடிச்சேன். இப்ப விவசாயம் பாக்குறேன். தினமும் தீவிரமாக பிராக்டிஸ் பண்ணுவேன். எனக்கு இப்போ 37 வயசாச்சு, திருமணமாகி 3 குழந்தைகள் இருக்காங்க. என் வயசு உடையவங்க எல்லாரும் விளையாடுறத நிறுத்திட்டாங்க. நான், சின்ன பசங்களுக்கு வாலிபால் சொல்லித் தந்துட்டு, அப்டியே விளையாடிட்டு வறேன்.

எங்க டீம் சின்னாளப்பட்டியில் கிளஸ்டர்ல ஜெயிச்சோம். ஆனா, மதுரைல நடந்த டிவிஷனல் மேட்ச்ல தோத்துட்டோம். கிராமத்துல உள்ளவங்கள ஊக்குவிச்சு, விளையாட்டு வீரர்கள உருவாக்கும் நோக்கத்துல ஈஷா கிராமோத்சவம் விளையாட்டுப் போட்டிகள் நடத்துறது நல்ல விஷயம். குறிப்பா, என்ட்ரன்ஸ் பீஸ், வேற பீஸ்ன்னு எதுவுமே எங்ககிட்ட எதுவும் அவங்க வாங்கல.

எங்க டீம் 3 வருஷமா ஈஷா கிராமோத்சவம் போட்டிகளில் கலந்துக்குறோம். போன ரெண்டு வருஷமா கிளஸ்டர்லயே தோத்துட்டோம். இந்த வருஷம், கிளஸ்டர்ல ஜெயிச்சு, டிவிஷ்னல் வரைக்கும் போயிருக்கோம். கிராமத்துல திறமை இருக்குற விளையாட்டு வீரர்கள ஈஷா கண்டெடுக்குது.

கிளஸ்டர், மண்டலப் போட்டிகளில் ஜெயிச்சு, அப்படியே கோவை ஈஷா ஆதியோகி வளாகத்துல பைனல்ஸ் விளையாடனும்ன்னு ஆசை. இந்த வருஷம் நடக்கல. வரும் வருஷங்கள்ல தீவிரமா முயற்சி செய்வோம். விளையாட்டு ஆர்வம் குறையும் போது, பசங்க போதை, கஞ்சா போன்ற வழியில போயிடறாங்க. குரூப்பா சேர்ந்து விளையாடும் போது, அந்த எண்ணம் மாறிடுது. விளையாடிட்டே இருக்குறதால உடம்ப ஆரோக்கியமா வெச்சுக்க முடியுது” என்றார்.

ஈஷா கிராமோத்சவம், கிராமத்து மண்ணில் இளைய மனங்களில் கனவுகளை விதைத்து, இளைஞர்களின் திறமையை வெளிக்கொணர்கிறது. மணி போன்ற இளைஞர்களுக்கு விளையாட்டின் மூலம் உற்சாகமும் நம்பிக்கையும் பரப்புகிறது இவ்விளையாட்டுத் திருவிழா.