Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கான ஆதி கலைக்கோல் பயிற்சி பட்டறை நிகழ்ச்சி: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நேற்று நடைபெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கான ஆதி கலைக்கோல் பயிற்சி பட்டறை நிகழ்ச்சியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முன்னதாக அங்கு அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியில் அரசு சமூக நீதி கல்லூரி விடுதி மாணவர்களின் ஓவியம் மற்றும் சிற்ப கலை படைப்புகளையும், பழங்கால பாரம்பரிமிக்க இசைக்கருவிகளையும் பார்வையிட்டு, இசைக்கலைஞர்கள் அந்த இசைக்கருவிகளை கொண்டு பல்வேறு விதங்களில் இசைப்பதையும் ஆர்வத்துடன் கேட்டு ரசித்தார்.

விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுடைய கலை வடிவங்களை இளம் தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு தான் இந்த 3 நாள் பயிற்சி பட்டறை ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. 1946ம் ஆண்டு தஞ்சை மாவட்டத்தில் திருவையாறு தியாகராஜர் உற்சவம் விழா நடைபெற்றது. அந்த காலகட்டத்தில், பெரியார் நடத்தியிருந்த ‘குடி அரசு’ பத்திரிகையில் கலைஞர் பணியாற்றி கொண்டிருந்தார். அப்போது, தண்டபாணி தேசிகர் என்பவர், தியாகராஜர் உற்சவ மேடையில் ஒரு தமிழ்ப் பாட்டு பாடினார்.

அவருக்கு அடுத்து வந்த பாடகர் ஒருவர், “தண்டபாணி தேசிகர் தமிழ்ப்பாட்டு பாடியதால் இன்றைக்கு இந்த மேடையே தீட்டு ஆகிவிட்டது. அதனால் இனிமேல் நான் இந்த மேடையில் பாட மாட்டேன்” என்று சொன்னார். இதை கேள்விப்பட்ட கலைஞர், அப்போது அவர் வேலை செய்த குடியரசு பத்திரிகையில் ‘தீட்டாயிடுத்து’ என்கின்ற தலைப்பில் ஒரு பெரிய தலையங்கத்தை எழுதி தன்னுடைய எதிர்ப்பை அந்த வயதிலேயே அவர் தெரிவித்தார். அந்த காலத்தில் இசையில் எந்த அளவுக்கு பாகுபாடு இருந்தது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.

மூட நம்பிக்கைகளை பரப்பிட கலைகளை பயன்படுத்தக் கூடாது என்பதில் பெரியார் மிகத் தெளிவாக இருந்தார். பெரியார் சொன்னதை தான், நம்முடைய திராவிட இயக்க படைப்பாளர்கள் இன்றைக்கு தொடர்ந்து பின்பற்றி வருகிறார்கள். ஆதிதிராவிட மக்களுடைய கலைகளை அனைத்து மக்களுக்குமான கலைகளாக ஆக்குவதற்கு இதுபோன்ற பயிற்சி பட்டறைகள் தொடர்ந்து நடைபெற வேண்டும். இந்த துறை அதனை தொடர்ந்து நடத்தும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. அதற்கு எல்லா வகையிலும் இந்த திராவிட மாடல் அரசும், நம்முடைய முதல்வரும் உங்களுக்கு துணை நிற்பார்கள். இந்த 3 நாள் பயிற்சி பட்டறை சிறப்பாக அமையட்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மா.மதிவேந்தன், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழக தலைவர் இளையராஜா, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் லட்சுமி பிரியா, ஆதிதிராவிடர் நலத்துறை ஆணையர் ஆனந்த், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழக மேலாண்மை இயக்குநர் கந்தசாமி, மூத்த பறை இசை கலைஞர் பத்ம வேலு ஆசான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.