Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆடி மாதத்தை முன்னிட்டு கட்டணமின்றி 1,000 பேரை ஆன்மிகப் பயணம் அழைத்து செல்வதற்கு திட்டம்: இந்து சமய அறநிலையத்துறை அசத்தல்

மதுரை: ஆடி மாதத்தில் கட்டணமில்லாமல் ஆன்மிக பயணமாக 1000 பேரை அழைத்துச் செல்ல இந்து சமய அறநிலையத்துறை திட்டமிட்டுள்ளது. இந்து சமய அறநிலைத்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆடி மாதத்தில் புகழ்பெற்ற அம்மன் கோயில்களுக்கு 1,000 மூத்த குடிமக்களை கட்டணமில்லா ஆன்மிக பயணம் அழைத்துச் செல்ல தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மதுரை, திருச்சி, நெல்லை, சென்னை, தஞ்சாவூர் ஆகிய மண்டலங்களை தலைமையிடமாகக் கொண்டு, 1,000 மூத்த குடிமக்கள் அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.

ஆடி மாத ஆன்மிக பயணம் 4 கட்டங்களாக, வரும் 19ம் தேதி, 26ம் தேதி மற்றும் ஆக. 2ம் தேதி, 9ம் தேதிகளில் தொடங்குகிறது. இதில், 60 முதல் 70 வயதுக்குட்பட்ட மூத்த குடிமக்கள் வரும் 17ம் தேதிக்குள் விண்ணப்பித்து வாய்ப்பு பெறலாம். பக்தர்கள் இந்து மதத்தைச் சார்ந்தவர்களாக இருக்க வேண்டும். 60 முதல் 70 வயதுக்கு உட்பட்டவர் என்பதை உறுதிப்படுத்த வயது சான்றிதழ் இணைக்க வேண்டும். போதிய உடல் தகுதி இருத்தல் வேண்டும். தற்போது வசிக்கும் வீட்டின் நிலையான முகவரிக்கான ஆதாரத்தை இணைக்க வேண்டும்.

சிறு குழந்தைகளை அழைத்துவர அனுமதியில்லை. ஆதார் கார்டு அல்லது பான்கார்டு இணைக்கப்பட வேண்டும். விண்ணப்பங்களை அறநிலையத் துறை இணை கமிஷனர், உதவி கமிஷனர், ஆய்வாளர், கோயில் அலுவலகங்களில் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பங்களை, இந்து சமய அறநிலையத் துறை வலைதளம் hrce.tn.gov.in, வாயிலாக பதிவிறக்கம் செய்தும் கொள்ளலாம். விண்ணப்பத்துடன், ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு மிகாமல் வருமான சான்று பெற்று இணைக்க வேண்டும்.

பக்தர்கள் ஒரு முறை மட்டுமே, இப்பயணத்தில் பங்கேற்க முடியும். இதுகுறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில், கோயில்களில் தகவல்கள் பிளக்ஸ் வைக்கப்பட்டு உள்ளன. மேலும் கோயிலுக்கு வருவோரிடம் இத்திட்டம் குறித்து விளக்கி விழிப்புணர்வு செய்யப்பட்டு வருகிறது’’ என்றார்.