திராவிட மாடல் ஆட்சியில் ஆதிதிராவிட மக்களின் நலனுக்கான திட்டங்களால் தமிழ்நாடு ஒளிர்கிறது: தமிழ்நாடு அரசு அறிக்கை
சென்னை: திராவிட மாடல் ஆட்சியில் ஆதிதிராவிட மக்களின் நலனுக்கான திட்டங்களால் தமிழ்நாடு ஒளிர்கிறது என தமிழ்நாடு அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்; முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் திராவிட மாடல் அரசு மூலம் எல்லார்க்கும் எல்லாம் கிடைத்திட வேண்டும் என்பதற்காகச் சிறப்பான பல திட்டங்களை நிறைவேற்றி வருகிறார்கள். அவற்றில் குறிப்பாக சமூக நீதி அடிப்படையில் தாழ்த்தப்பட்ட மலைவாழ் இன மக்களின் முன்னேற்றத்தில் தனிக் கவனம் செலுத்தி சிறப்பான பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார்கள்.
ஆதி திராவிடர்களின் கல்வி முன்னேற்றத்திற்கான திட்டங்கள்
பட்டியல் வகுப்பினர் பழங்குடியினர் வாழும் பகுதிகளில் அனைத்து வசதிகளுடனும் கல்விக் கூடங்கள், விடுதிகள், எல்லாம் அமைக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்கள். அதன்படி, ரூ.108.50 கோடி மதிப்பில் 154 பட்டியல் வகுப்பினர் நலப் பள்ளிகளில் 736 புதிய வகுப்பறைகள், 60 அறிவியல் ஆய்வுக் கூடங்கள் கட்டப்பட்டுள்ளன. மேலும், ரூ.125 கோடி மதிப்பீட்டில் ஆதி திராவிட நலப் பள்ளிகளில் கட்டடங்கள் கட்டப்படுகின்றன.ரூ.7.46 கோடி செலவில் 305 பட்டியல் வகுப்பினர் நலப் பள்ளிகளுக்குத் தேவையான அறைகலன்கள் மற்றும் தளவாடப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.
சிறப்பான கல்வியினை வழங்க உதவும் வகையில் 119 பட்டியல் வகுப்பினர் நலப் பள்ளிகளில் அறிவுத்திறன் வகுப்பறைகளும், 174 பள்ளிகளில் அறிவுத் திறன் பலகைகளும், 206 பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. சாதனங்களும் பாதுகாப்பும்: ரூ.8.37 கோடி செலவில் 305 பட்டியல் வகுப்பினர் நலப் பள்ளிகளுக்குத் தளவாடப் பொருட்களும் பிற உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளன. 318 பள்ளிகளில் ரூ.3.20 கோடி செலவில் சிசிடிவி மற்றும் பயோமெட்ரிக் வருகைப் பதிவு அமைப்புகள் நிறுவப்பட்டு பாதுகாப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது.
அரசுப் பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளிகளில் மேம்பாட்டுப் பணிகள்
39 பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளிகளுக்கு 65 வகுப்பறைகள் மற்றும் 39 ஆய்வுக் கூடங்கள், 34 பள்ளிகளுக்குச் சுற்று சுவர்கள் ரூ.21.13 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளன. கோட்டப்புதூர் அரசுப் பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் ரூ.96.43 இலட்சம் செலவில் மேலும் 3 வகுப்பறைகள் கட்டப்படுகின்றன. 7 மாவட்டங்களில் உள்ள 88 அரசு பழங்குடியினர் உண்டி உறைவிடப் பள்ளிகளுக்கு ரூ.9.24 கோடி மதிப்பீட்டில் வைப்பறையுடன் கூடிய புதிய சமையலறைகளும், 31 அரசு பழங்குடியினர் உண்டி உறைவிடப் பள்ளிகளில் ரூ.4.50 கோடி மதிப்பீட்டில் கழிப்பறைகளும் கட்டப்பட்டுள்ளன. 126 பட்டியல் வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள அறிவியல் ஆய்வகங்களுக்கு ரூ.3.15 கோடி மதிப்பீட்டில் ஆய்வு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. நவீனமயமாக்கல்:தொலைதூர மலைப்பகுதிகளில் உள்ள 8 அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளிகள் ரூ.38.95 கோடி செலவில் உயர்நிலைப் பள்ளி/மேல்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
6 மேல்நிலைப் பள்ளிகள் ரூ.16.26 கோடி செலவில் மாதிரிப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. மேலும், 119 ஸ்மார்ட் வகுப்பறைகள், 174 ஸ்மார்ட் பலகைகள், 206 உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள் ஆகியவை நிறுவப்பட்டுள்ளன. அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு: 88 அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளிகளில் ரூ.9.24 கோடி செலவில் சேமிப்புக் கிடங்குகளுடன் கூடிய சமையலறைகள் கட்டப்பட்டுள்ளன. 32 அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளிகளில் 65 கழிப்பறைகள் ரூ.4.85 கோடி செலவிலும்; 42 உயர்நிலைப் பள்ளி/மேல்நிலைப் பள்ளிகளில் 107 கழிப்பறைகலும் கட்டப்பட்டுள்ளன. 16 பட்டியல் வகுப்பினர் நல பள்ளிகளுக்கு ரூ.4.74 கோடி (ரூ.3.83 கோடி + ரூ.91.40 இலட்சம்) செலவில் சுற்றுச் சுவர்கள் கட்டப்பட்டுள்ளன.
அண்ணல் அம்பேத்கர் வெளிநாட்டுக் கல்வி உதவித்தொகை
வெளிநாடுகளுக்குச் சென்று படிக்க விரும்பும் ஆதி திராவிட பழங்குடியின இளைஞர்களுக்கு அண்ணல் அம்பேத்கர் வெளிநாட்டுக் கல்வி உதவித்தொகை திட்டத்தின்கீழ் அரசு வழங்கும் கல்வி உதவித் தொகை பெறுவதற்கான குடும்ப ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூ.3 லட்சம் என்பது ரூ.12 இலட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு 2021-22 இல் ரூ.5.31 கோடி என்பது 2025-26-ஆம் ஆண்டில் ரூ.65 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. பயனாளிகளின் எண்ணிக்கையும் இதனால் 2021-22 இல் 9 என்பது 2025-26 இல் 213 ஆக உயர்ந்துள்ளது. கலை, அறிவியல், வணிகம், சட்டம், பொறியியல் மற்றும் மருத்துவம் போன்ற துறைகளில் வெளிநாடுகளில் முதுகலை அல்லது ஆராய்ச்சி படிப்பைத் தொடரும் மாணவர்களுக்கு அதிகபட்சமாக ஆண்டுக்கு ரூ.36 இலட்சம்வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
உயர் கல்வி நிறுவனங்களின் நுழைவுத் தேர்விற்கான பயிற்சிகள்
பழங்குடியினர் நலத்துறை மூலம் GTR பள்ளிகளில் பயிலும் பழங்குடியின மாணாக்கர்களுக்கு JEE, NEET, CLUT, NIFT மற்றும் CUET போன்ற உயர்கல்வி தேர்விற்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு மருத்துவக் கல்லூரியில் 2 மாணவர்களும், திருச்சி NIT கல்லூரியில் 3 மாணவர்களும், திருச்சி தேசிய சட்டக் கல்லூரியில் ஒரு மாணவரும், சென்னை தரமணி NIFT-ல்4 மாணவர்களும் திண்டுக்கல் காந்தி கிராம் மத்திய பல்கலைக் கழகத்தில் 6 மாணவர்களும், ஆக 16 மாணவர்கள் சேர்ந்து அரசின் கல்வி உதவித் தொகையுடன் பயின்று வருகின்றனர். முதலமைச்சர் அவர்களின் இத்தகைய புரட்சிகரமான திட்டங்களால் பட்டியல் வகுப்பினர் பழங்குடியின இளைஞர்கள் கல்வியில் வரலாறு காணாத வகையில் முன்னேற்றம் அடைந்து வருகின்றனர்.
10 ஆம் வகுப்பு பொது தேர்வில் 2021-2022 ஆம் ஆண்டில் ஆதி திராவிடர் பழங்குடியின தேர்ச்சி விகிதம் 78% என்பது 2023-2024 ஆம் ஆண்டில் 92% என உயர்ந்து சாதனை படைத்தது, அதே போல 12ஆம் வகுப்பு பொது தேர்வில் பட்டியல் வகுப்பினர் பழங்குடியின தேர்ச்சி 2021-2022 இல் 84% சதவீதம் என்பது 2023-2024 ஆம் ஆண்டில் 96% சதவீதம் அதிகரித்து சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. இதன் பயனாக 60 ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவில் பழங்குடி இன சமுதாயத்தைச் சேர்ந்த ரோகினி, சுகன்யா, என்னும் இரண்டு மாணவியர் 2024 ஜே.இ.இ தேர்வில் தேர்ச்சி பெற்று திருச்சி என்.ஐ.டி இல் சேர்ந்து மாபெரும் சாதனைகள் படைத்தனர்.
சாதனைகள் படைத்துள்ள மலைவாழ் மக்கள் இன மாணவிகள்
எல்.சுகன்யா, ஆர்.ரோகினி ஆகிய இருவரும் சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளியில் படித்தவர்கள். இவர்கள் ஜே.இ.இ. தேர்ச்சி பெற்று திருச்சி என்.ஐ.டி. நிறுவனத்தில் சேர்ந்து படிப்பதற்கு நான் முதல்வன் திட்டம்தான் எங்களுக்கு உதவியது என்று கூறி முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்கள். விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த சுந்தரராஜபுரம் பட்டியல் வகுப்பினர் நலத்துறை பள்ளி மாணவர் சி. பார்த்தசாரதி சென்னை ஐ.ஐ.டி நிறுவனத்தில் வானூர்தி வடிவமைப்புப் பிரிவில் சேர்ந்து, தனது கனவு நிறைவேறியது என்று பெருமிதத்துடன் கூறியுள்ளார்.
பட்டியல் இன நலத்துறை நடத்தும் பள்ளிகளில் படித்து முதன் முதல் ஐ.ஐ.டி நிறுவனத்தில் சேர்ந்த அந்த மாணவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கனவு திட்டமான நான் முதல்வன் திட்டம் தான் எனக்கு இந்த வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தது என்று நன்றியுடன் நெகிழ்ந்து கூறினார். இப்படி பட்டியல் இன மலைவாழ் இன சமுதாயங்களைச் சேர்ந்த மாணவ-மாணவியர், உயர் கல்வி நிறுவனங்களில் சேர்ந்து பயில்வதற்கு எல்லாம் வழிவகுத்துத் தந்துள்ளது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் திராவிட மாடல் ஆட்சியின் திட்டங்களே என்று கூறினால் அது மிகையாகாது.
நுழைவுத் தேர்வுப் பயிற்சி:
59 அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கு ரூ.2.52 கோடி செலவில் உயர்கல்வி தேர்வுகளுக்கான (JEE, NEET, CLAT, NIFT, CUET) பயிற்சி வழங்க வழங்கப்பட்டன. 2025-26 ஆம் ஆண்டில் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளிகளைச் சேர்ந்த 111 மாணவர்களும், பட்டியல் வகுப்பினர் நல பள்ளிகளைச் சேர்ந்த 26 மாணவர்களும் நுழைவுத் தேர்வுகளில் (IIT, NIT மற்றும் தேசிய சட்டக் கல்லூரி உட்பட) தேர்ச்சி பெற்று தலைசிறந்த நிறுவனங்களில் இடம் பெற்றுள்ளனர்.
புதிய விடுதிகள்&புதுப்பித்தல்:
சமூக அளவில் இழிவைச் சுட்டி நிற்பதால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து மேற்கொண்டுவரும் சமூக நீதி சிந்தனைகளின் வெளிப்பாடாக பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை விடுதிகளைச் சமூக நீதி விடுதிகள் என 7.7.2025 அன்று பெயர் மாற்றி உத்தரவிட்டுள்ளார்கள். இந்தச் சமூக நீதி விடுதிகளில் 71 புதிய விடுதிகள் கட்டுவதற்கு ரூ.615.33 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு; 30 விடுதிகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. 535 விடுதிகள் ரூ.100.23 கோடி செலவில் மாணவர்களுக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
எம்.சி. ராஜா மாணவர் விடுதி:
இந்த விடுதி வளாகத்தில் ரூ.44.50 கோடி செலவில் 10 தளங்கள் கொண்ட புதிய விடுதி கட்டப்பட்டு; 484 மாணவர்கள் தற்போது பயனடைந்து வருகின்றனர். பட்டியல் வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டு செயல் திட்டம் (DAP): நிதி உரிய முறையில் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்காக, பட்டியல் வகுப்பினர் மற்றும் பழங்குடியினருக்கான தமிழ்நாடு மேம்பாட்டு செயல் திட்டச் சட்டம், 2024 இயற்றப்பட்டது. 2025-2026 நிதியாண்டில், பட்டியல் வகுப்பினர் துணைத் திட்டத்திற்கு 21.97 சதவீத நிதியாக ரூ.20,365.64 கோடி மற்றும் பழங்குடியினர் துணைத் திட்டத்திற்கு 2.03 சதவீத நிதியாக ரூ.1,879.09 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பட்டியல் இன மற்றும் பழங்குடியின மக்கள் முன்னேற்றம் கண்டு வருகின்றனர்.
தொழில்முனைவோர் மற்றும் மாணவர்களுக்கான பயிற்சிகள்:
10,000 மாணவர்களுக்கு ரூ.10.00 கோடி செலவில் வேலைவாய்ப்பு மற்றும் போட்டித் தேர்விற்கான பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. 5,000 தொழில்முனைவோருக்கு ரூ.1.67 கோடி செலவில் தொழில் மேலாண்மைப் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. 500 பயனாளிகளுக்குப் கால்நடைகள் வாங்குவதற்காக ரூ.7.50 கோடி மொத்தச் செலவில் ரூ.2.25 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு சிமெண்ட் விற்பனை நிலையங்கள் மற்றும் ஆவின் பாலகங்களை அமைப்பதற்கும் மானியங்கள் வழங்கப்பட்டுள்ளன.
நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம்:
விவசாயத் தொழிலாளர்களாக உள்ள பட்டியல் வகுப்பினர் மற்றும் பழங்குடியின மகளிரை நில உடமையாளர்களாக உயர்த்தி சமூக நிலை மற்றும் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கில் நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கிரையம் செய்யப்படும் நிலங்களுக்கு சந்தை மதிப்பில் 50 விழுக்காடு அல்லது அதிகப்பட்சம் ரூ.5.00 இலட்சம் மானியமாக வழங்கப்படுகிறது. மேலும், கிரையம் பெறும் நிலங்களுக்கு முத்திரைத் தாள் மற்றும் பதிவு கட்டணம் செலுத்துவதிலிருந்து அரசால் முழுவிலக்கு அளிக்கப்பட்டு வருகிறது. நான்கு ஆண்டுகளில் மொத்தம் 1042 மகளிர் நிலம் வாங்குவதற்காக மொத்தம் 49.35 கோடி நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.
இலவச வீட்டுமனை பட்டாக்கள்
வீடற்றபட்டியல் வகுப்பினர்/பழங்குடியினமக்களுக்கு மொத்தம் 2,88,476 இலவச வீட்டுமனை இ-பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.
வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உயர்த்தப்பட்ட உதவித்தொகை:
வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச உதவித் தொகை ரூ.85,000-லிருந்துரூ.1,00,000 ஆகவும், அதிகபட்சத் தொகை ரூ.8,25,000-லிருந்துரூ.12,00,000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில், 18,119 பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.222.28 கோடி நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. கூடுதலாக, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 586 பேருக்குக் கருணை அடிப்படையில் பணி நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளது. பட்டியல் வகுப்பினர்/பழங்குடியினர் (வன்கொடுமைத் தடுப்பு) சட்டம்குறித்து 40 சிறப்பு நீதிமன்ற நீதிபதிகளுக்கும் 37 சிறப்பு அரசு வழக்கறிஞர்களுக்கும் சிறப்புச் சட்டப் பயிற்சி நடத்தப்பட்டது. வன்கொடுமை சட்டத்தினை சிறப்பாக கையாளும் பொருட்டு அரசு அலுவலகர்கள் மற்றும் காவல்துறை அலுவலர்களுக்கு உரிய பயிற்சி வழங்கப்பட்டுள்ளன.
தூய்மை பணியாளர்களின் தோழனாக விளங்கும் திராவிட மாடல் அரசு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தூய்மைப் பணியாளர்கள் செய்வது வேலையல்ல. அது சேவை எனக் கூறி, அவர்களின் நலன் நாடுவதில் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார்கள். தூய்மைப் பணியாளருக்கு மூன்று வேளையும் உணவு வழங்கும் முதலமைச்சரின் உணவுத் திட்டத்தை 15.11.2025 அன்று கலைவாணர் அரங்கத்தில் தொடங்கி வைத்தார்கள். இதன்படி, 31,373 தூய்மைப் பணியாளருக்கு உணவு வழங்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதிலும் உள்ள தூய்மைப் பணியாளருக்கு இத்திட்டம் டிசம்பர் திங்கள் 6 நாள் முதல் விரிவுபடுத்தப்படுகிறது. முதலமைச்சர் தாயுமானவராகத் திகழ்ந்து தமிழ்நாட்டினை வளர்த்தெடுத்து வருகிறார்கள்.
அதன் ஒரு பணியாக பணியில் உயிரிழக்கும் தூய்மைப் பணியாளர்கள் பணிக்காலத்தில் உயிரிழந்தால் அவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை ரூ.5 லட்சம் என்பதை ரூ.10 இலட்சமாக உயர்த்தி வழங்கியுள்ளார்கள். தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகள் எந்தப் பள்ளியில் பயின்றாலும், அவர்களுக்கு உயர் கட்டணச் சலுகைகள் மட்டுமின்றி, விடுதிக் கட்டணம், புத்தகக் கட்டணங்களுக்கான உதவித் தொகையை வழங்கிடும் வகையில், “புதிய உயர் கல்வி உதவித் தொகை திட்டத்தை” அறிமுகப்படுத்தியுள்ளார்கள்.
தூய்மைப் பணியாளர்களுக்கு 1000 வீடுகள் வழங்கிய திராவிட நாயகர்
முதலமைச்சர் 90 சதவீத அரசு மானியத்துடன் 1,000 வீடுகள் துப்புரவுப் பணியாளர்களுக்கு ரூ.110 கோடி செலவில் வழங்கியுள்ளார். மேலும், சொந்த வீடு இல்லாத தூய்மைப் பணியாளர்களுக்கு வரும் மூன்று ஆண்டுகளில், 30,000 வீடுகள் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்கள். நகர்ப்புற பணியாளர்களுக்குதமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் திட்டங்கள் வாயிலாகவும், கிராமப்புறப் பணியாளர்களுக்கு"கலைஞர் கனவு இல்லம்" திட்டத்தின்கீழும் வீடுகள் வழங்கப்படுகின்றன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சிறப்பான திட்டங்களால் தமிழ்நாட்டில் வாழும் ஆதிதிராவிட, பழங்குடியின மக்கள் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் கல்வி, சமூக, பொருளாதார நிலைகளில் உயர்ந்து முன்னேற்றம் கண்டு வருகின்றனர்.


