ஆதிதிராவிட மாணவ, மாணவியர் விடுதிகளில் சிறப்பு குழு அமைத்து ஆய்வு: ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தல்
சென்னை: ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகம் முழுவதும் ஆதி திராவிடர் நலத்துறை சார்பில் உள்ள சுமார் 1331 மாணவ, மாணவியர் விடுதிகளில் ஏறத்தாழ 82,500 பள்ளி மாணவர்களும், 16,500 கல்லூரி மாணவர்களும் என்று 99 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் தங்கியுள்ளனர். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விதிகளின்படி, உணவு படி வழங்க வேண்டும். ஆனால் வழங்கு வதில்லை. தமிழகத்தில் உள்ள விடுதிகளில் எந்த ஒரு அடிப்படை வசதியும் கிடையாது. விடுதி வசதி சரியாக இல்லை என பட்டியலின பழங்குடியின மாணவ, மாணவியர் சாலைக்கு வந்து போராடிக் கொண்டிருக்கின்றனர். எனவே, முதல்வர் மு.க.ஸ்டாலின், சிறப்புக் குழு அமைத்து, ஆதிதிராவிட மாணவ, மாணவிகளின் விடுதிகளில் போர்க்கால அடிப்படையில் ஆய்வுகள் மேற்கொண்டு, நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறேன்.