நல்லம்பள்ளி : அதியமான்கோட்டை அருகே, தர்மபுரி- சேலம் மெயின்ரோட்டில் முறையான குடிநீர் விநியோகம் செய்யக்கோரி, 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தர்மபுரி மாவட்டம், அதியமான்கோட்டை அருகே தேவரசம்பட்டி கிராமத்தில், 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தின் கீழ், இப்பகுதி குடியிருப்பு மக்களுக்கு, ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. கடந்த ஒரு வாரமாக முறையான குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதுகுறித்து அதியமான்கோட்டை ஊராட்சி மற்றும் பிடிஓ அலுவலகத்தில் அப்பகுதி மக்கள் புகார் அளித்தனர்.
ஆனால், அதிகாரிகள் தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், அதிருப்தி அடைந்த பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோர், நேற்று காலை 7 மணிக்கு, காலி குடங்களுடன் தர்மபுரி- சேலம் மெயின்ரோட்டுக்கு வந்தனர். அங்கு கலெக்டர் பங்களா செல்லும் சாலையின் நடுவில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த அதியமான்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா, நல்லம்பள்ளி பிடிஓ நீலமேகம் உள்ளிட்ட வருவாய் துறை அலுவலர்கள், மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி முறையான குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.
தொடர்ந்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.