Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆதிச்சநல்லூரில் அமைக்கப்பட்டுள்ள சைட் மியூசியத்தை மாணவர்கள் அவசியம் பார்வையிட வேண்டும்: கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்

தூத்துக்குடி: ஆதிச்சநல்லூரில் அமைக்கப்பட்டுள்ள சைட் மியூசியத்தை பள்ளி, கல்லூரிகளில் பயிலும் ஒவ்வொரு மாணவ-மாணவியும் அவசியம் காணவேண்டும் என்று கனிமொழி எம்பி வலியுறுத்தி உள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றின் கரையோரம் ஸ்ரீவைகுண்டம் அருகே 125 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது மிகப்பெரிய பரம்பு. இப்பகுதியில் ஆய்வு பணிகளை தொடங்கி அகழாய்வு பணி தீவிரமாக நடந்தது.

இந்த அகழாய்வு பணியில் தங்கம், வெண்கலம், இரும்பால் ஆன பொருட்கள், மண்பாண்டத்தில் ஆன முதுமக்கள் தாழிகள், பல்வேறு தொல்லியல் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. ஏ, பி, சி என 3 பிரிவுகளாக நடந்த அகழாய்வு பணியில் பி மற்றும் சி பிரிவுகளில் அதிகமாக பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் பி சைட்டில் இந்தியாவிலேயே முதன் முறையாக சைட் மியூசியம் அமைக்கப்பட்டது. இந்த சைட் மியூசியம் என்பது தொல்பொருட்களை எடுத்த இடத்தில் அப்படியே காட்சிப்படுத்துவதே ஆகும். இந்த பி சைட்டில் முதுமக்கள் தாழிகளை அதே இடத்தில் வைத்து அதன் மேலே கண்ணாடி பேழைகள் மூலம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. உலகத்தில் பல்வேறு இடங்களில் இருந்தும் மக்கள் இங்கு வந்து இந்த சைட் மியூசியத்தை பார்வையிட்டு பாராட்டியும் செல்கின்றனர்.

இந்நிலையில் கீழவல்லநாட்டில் உள்ள தூத்துக்குடி மாவட்ட மாதிரி அரசு பள்ளியில் உள்ள மாணவ-மாணவிகளை சந்தித்து கலந்துரையாடிய கனிமொழி எம்பியிடம், நாங்கள் இதுவரை எந்த ஊருக்கும் சுற்றுலா சென்றது கிடையாது. எனவே நீங்கள் எங்களை தொல்லியல் சார்ந்து நமது பண்பாடு சார்ந்த இடத்திற்கு அழைத்துச் செல்லுமாறு கோரிக்கை விடுத்தனர். நிச்சயம் அழைத்துச் செல்வதாக உறுதி அளித்த கனிமொழி எம்பி, நேற்று அவர்களின் ஆசையை நிறைவேற்றினார்.

மாவட்ட அரசு மாதிரி பள்ளி மாணவ, மாணவியர் 200 பேரை 4 பஸ்கள் மூலம் ஆதிச்சநல்லூருக்கு அழைத்து வந்தார். இந்த பஸ்களில் மாணவ- மாணவிகளுடன் அவரும் பயணம் செய்தார். ஆதிச்சநல்லூர் பி சைட்டில் உள்ள சைட் மியூசியம், சி சைட்டில் மியூசியம் அமைய உள்ள இடத்தில் வைக்கப்பட்ட தொல்லியல் பொருட்களை மாணவ, மாணவியருடன் சேர்ந்து பார்வையிட்டார்.

பின்னர் கனிமொழி எம்பி கூறுகையில், ‘‘பள்ளி, கல்லூரிகளில் பயிலும் ஒவ்வொரு மாணவ-மாணவியும் ஆதிச்சநல்லூர் சைட் மியூசியத்தை பார்க்க வேண்டியது மிகவும் அவசியம் ஆகும். இந்தியாவிலேயே முதல் முதலில் அமைந்த சைட் மியூசியம் இது. எனவே அரசு மாதிரி பள்ளியை தற்போது ஆதிச்சநல்லூர் அழைத்து வந்து காட்டியுள்ளோம். இதுபோல் மற்ற பகுதியில் இருந்து மாணவ-மாணவிகள் ஆதிச்சநல்லூர் சைட் மியூசியத்தை காண வரவேண்டும்’’ என்றார்.