நாகப்பட்டினம்: சிவசேனா உத்தவ் பாலா சாகிப் தாக்கரே கட்சி மாநில பொதுச்செயலாளர் சுந்தரவடிவேலன் உள்துறை அமைச்சக அலுவலகத்திற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது: காவல்துறையின் கட்டுப்பாடுகளுக்கு கட்டுப்படாமல், நியாயமான நிபந்தனைகளுக்குட்பட்டு நடக்காமல், மின் கம்பங்களிலும், மரங்களிலும், தனியார் சொத்துக்களிலும், அடுத்தவர் வீட்டு மொட்டை மாடிகளிலும் தான்தோன்றித்தனமாக, மனித தன்மையற்ற முறையில் அத்து மீறி நுழைந்து ஏறி பொது சொத்துக்களுக்கு தமிழக வெற்றிக்கழக தொண்டர்கள் சேதத்தை ஏற்படுத்தியுள்ளனர். மேலும், 41 மனித உயிர்களின் பேரிழப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கு அதி முக்கியமான காரணமாக இருந்துவிட்டு கலவரத்தை தூண்டும் வகையில், சமூக நல்லிணக்கத்தை கெடுக்கும் விதமாக, சமூக பதற்றத்தை உருவாக்கும் நோக்கத்தில் சமூக வலைதளத்தில் பதிவு செய்து சட்டம் ஒழுங்கு பிரச்னையை உருவாக்கி அசாதாரணமான, நெருக்கடியான சூழலை உருவாக்க முயற்சிக்கும் ஆதவ்அர்ஜுனாவை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் ஒன்றிய அரசு கைது செய்ய வேண்டும். இதற்கு தமிழக அரசு தயக்கம் இன்றி பரிந்துரை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.