Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் பாதுகாப்புக்காக மாம்பலம் காவல் நிலையத்தில் அதிநவீன கட்டுப்பாட்டு அறை: கூடுதல் கமிஷனர் திறந்து வைத்தார்

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தி.நகர் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுப்படுத்தும் வகையில் மாம்பலம் காவல் நிலையத்தில் 24 மணி நேரம் இயங்கும் அதிநவீன வசதிகளுடன் கூடிய கட்டுப்பாட்டு அறையை சென்னை தெற்கு மண்டல கூடுதல் கமிஷனர் கண்ணன் நேற்று தொடங்கி வைத்தார். தீபாவளி பண்டிகை வரும் திங்கள் கிழமை (20ம் தேதி) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பொதுமக்கள் புத்தாடைகள், இனிப்புகள் மற்றும் பொருட்கள் வாங்க தி.நகர், பாண்டிபஜார், புரசைவாக்கம், மயிலாப்பூர், பூக்கடை, வண்ணாரப்பேட்டை, கோயம்பேடு ஆகிய பகுதிகளில் குவிந்து வருகின்றனர். இதனால், மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. பொதுமக்கள் பாதுகாப்புக்காக சென்னை மாநகர காவல்துறை 18 ஆயிரம் போலீசார் சுழற்சிமுறையில் அவரவர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னையின் முக்கிய வர்த்தக பகுதிகளான தி.நகர் ரங்கநாதன் தெரு, பாண்டி பஜார் பகுதிகளில் 8 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 4 உதவி காவல் மையங்கள், 2 தற்காலிக காவல் உதவி கட்டுப்பாட்டு அறை, திருடர்கள் மற்றும் கொள்ளையர்களை அடையாளம் காட்டும் 90 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், பொதுமக்கள் கூட்டத்தில் திருட்டு உள்ளிட்ட சம்பவங்களை தடுக்க 3 டிரோன் மூலம் போலீசார் கண்காணித்து வருகின்றனர். கூட்ட நெரிசலில் காணாமல் போகும் குழந்தைகளை கண்டறிய ரங்கநாதன் மற்றும் உஸ்மான் சாலையில் ஆடைகள் மற்றும் பொருட்கள் வாங்க வரும் பொதுமக்களின் குழந்தைகளுக்கு அவர்கள் பெயர்கள் மற்றும் பெற்றோர்கள் செல்போன் எண் கொண்ட பட்டை குழ்ந்தைகள் கையில் கட்டுப்பட்டு வருகிறது.

கூட்ட நெரிசலை பயன்படுத்தி நடைபெறும் குற்றங்களை தடுக்கும் வகையில் சாதாரண உடையில் 16 ஆண் மற்றும் பெண் காவலர்கள் 5 தனித்தனி குழுக்களாக பிாிந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பெண்களின் பாதுகாப்புக்காக போலீசார் நகைகளை பாதுகாக்கும் வகையில் கைகுட்டை ஒன்று கழுத்தில் கட்டி விடுகின்றனர்.

சந்தேக நபர்கள் யாரேனும் நடமாடினால் அவர்கள் குறித்து தகவல் அளிக்கும்படி 16 இடங்களில் ஒலிபெருக்கி மூலம் போலீசார் அவ்வபொழுது பொதுமக்களிடம் அறிவித்து வருகின்றனர். அந்த வகையில், தி.நகர் ரங்கநாதன் தெரு, பாண்டிபஜார் உள்ளிட்ட பகுதியில் மட்டும் பொதுமக்கள் பாதுகாப்புக்கு இணை கமிஷனர் கல்யான் மேற்பார்வையில் மற்றும் துணை கமிஷனர் குத்தாலிங்கம் தலைமையில் 200 போலீசார் மற்றும் 100 ஆயுதப்படை காவலர்கள் பாதுகாப்பு பணி மேற் கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், தீபாவளி பண்டிகைக்காக பொருட்கள், துணிகள், இனிப்புகள் வாங்க வரும் பொதுமக்களின் பாதுகாப்புக்காக சென்னை போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவுப்படி மாம்பலம் காவல் நிலையத்தில் 24 மணி நேரம் இயங்கும் வகையில் அதிநவீன தொழில்நுட்ப உதவியுடன் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாட்டு அறையை சென்னை தெற்கு மண்டல கூடுதல் கமிஷனர் கண்ணன் நேற்று மாலை தொடங்கி வைத்தார். அப்போது தி.நகர் பகுதியில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை உயர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும், பொதுமக்களிடம் புகார் வந்த அடுத்த நொடியே சம்பவ இடத்தில் போலீசார் சென்று விசாரணை நடத்தி தீர்வு காண வேண்டும் என்று போலீசாருக்கு உத்தரவிட்டார்.