அடுத்தாண்டு முதல் கூடுதல் மின்சாரம் கிடைக்க வாய்ப்பு எண்ணூர், உடன்குடி அனல் மின்நிலைய பணிகள் மும்முரம்: அதிகாரிகள் தகவல்
சென்னை: எண்ணூரில் அனல்மின் நிலையம் அமைக்க 2014ல் ரூ.18 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் திட்டமிடப்பட்டது. இருப்பினும், இதற்கான தொடக்க பணிகள் 2016ல்தான் ஆரம்பிக்கப்பட்டன. ஒரு சில காரணங்களால் திட்டப்பணிகள் தள்ளிப்போனது. தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் இப்பணிகள் தொடங்கி இறுதி கட்டப்பணிகள் நடந்து வருகின்றன. அதேபோல், தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி அனல் மின் நிலையம் முக்கியமான கட்டத்தை எட்டி உள்ளது. முதல்கட்டமாக மின் நிலையத்தை கிரிட் கூட இணைத்தார்கள். இது மின்சார உற்பத்தியை தொடங்குறதுக்கான முக்கியமான படியாகும். இந்த ஆலையும் இந்த வருடம் டிசம்பரில் முழுமை பெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: நீண்ட வருடமாக நடந்து வந்த இப்பணிகள் முடிவுறும் தருவாயில் உள்ளன. அண்மையில் எண்ணூரில் மின்வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன் டர்பைன், கொதிகலன், காஸ் இன்சுலேட்டட் ஸ்விட்ச் கியர் போன்ற பணிகளை ஆய்வு செய்தார். பணிகளை முடிப்பதில் உள்ள இடர்பாடுகளை உடனடியாக சரி செய்து விரைந்து தீர்க்கவும் உத்தரவிட்டுள்ளார். அதேபோல், வடசென்னை அனல் மின் நிலையங்கள் I, II, IIIல பராமரிப்பு வேலைகளையும் ஆய்வு செய்தார். குறிப்பாக, பருவமழை தொடங்கும் முன் அனைத்து நிலையங்களையும் முழு திறனோட இயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
தமிழகத்தை மின்மிகை மாநிலமாக உயர்த்துவதில் தொடர்ந்து பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் சூழலில் எண்ணூர் மற்றும் உடன்குடி அனல் மின்நிலைய பணிகள் முடியும் பட்சத்தில் 2640 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக கிடைக்கும். அடுத்தாண்டு கோடை காலத்தில் மாநிலத்தின் மின் தேவை 22 ஆயிரம் மெகாவாட்டை தாண்டும் என கணிக்கப்பட்டுள்ளது. அதை ஈடு செய்யும் வகையில் இந்த மின்சாரம் இருக்கும். அதேபோல், மின்வாரியம் மூலமாக, குறுகிய மற்றும் நடுத்தர கால மின்சார கொள்முதல் ஒப்பந்தங்கள் போடப்பட்டு உள்ளது. இதனால், ஒவ்வொரு ஆலையும் ஒரு யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்தால், வெளியில் இருந்து வாங்கும் மின்சாரத்தின் அளவு என்பது குறையக்கூடும். இவ்வாறு அவர் கூறினார்.