Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

மக்காச்சோளத்தில் கூடுதல் வருமானம்

*வேளாண்துறையினர் அறிவுறுத்தல்

சாத்தூர் : மானாவாரி நிலத்தில் கூடுதல் வருமானம் பெற விவசாயிகளுக்கு வேளாண் துறையினர் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

சாத்தூர் சுற்றுப்பகுதியில் உள்ள இருக்கன்குடி, பெத்துரெட்டிபட்டி, அம்மாபட்டி, ராமலிங்காபுரம், சடையம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் வருடந்தோறும் விவசாயிகள் மக்காசோளம் பயிர் செய்து வழக்கம். இந்தாண்டு மக்காசோளம் பயிர் செய்வதற்கு வசதியாக தங்களின் விளை நிலங்களை விவசாயிகள் உழவு செய்து வைத்துள்ளனர்.

இந்நிலையில் இது குறித்து வேளாண் துறையினர் தெரிவித்துள்ளதாவது: மக்காச்சோளம் பயிரிட பயிர் அறுவடைக்கு பின்பு சட்டிக்கலப்பை கொண்டு ஆழமாக உழவு செய்ய வேண்டும்.

இறவை நிலத்திற்கு ஹெக்டேருக்கு 10 கிலோவும், மானாவாரி நிலத்திற்கு ஹெக்டேருக்கு 15 கிலோவும் விதைகள் தேவைப்படும். 45க்கு 15 சென்டிமீட்டர் அல்லது 45க்கு 10 சென்டிமீட்டர் இடைவெளி இருக்க வேண்டும்.

விதைகளை 1 லிட்டர் தண்ணீரில் 20 கிராம் பொட்டாசியம் டை ஹைட்ரஜன் பாஸ்பேட் என்ற அளவில் தண்ணீரில் 6 மணி நேரம் ஊற வைத்த பிறகு 5 மணி நேரம் நிழலில் உலர்த்த வேண்டும். 1 ஹெக்டேருக்கு 600 கிராம் அசோஸ்பைரில்லம் பயன்படுத்தி விதை நேர்த்தி செய்ய வேண்டும்.

விதைப்பு செய்த 3ம் நாளும், பின் 10 நாட்களுக்கு ஒருமுறையும் நீர்ப்பாசனம் செய்ய வேண்டும். மக்கிய தொழு உரம், நுண்சத்து, மக்கிய தென்னைநார் கழிவுடன் அசோஸ்பைரில்லம், பாஸ்போ பேக்டீரியம், சாம்பல் சத்து, தழை மற்றும் மணிச்சத்து போன்றவற்றை வேளாண் அதிகாரிகளை ஆலோசித்து உர நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும். விதைத்த 30 நாட்களில் களை எடுக்க வேண்டும்.

மக்காச்சோளம் தனிப்பயிராக பயிரிடும்போது அட்ரசின் என்ற களைக்கொல்லியை தெளிக்க வேண்டும். மக்காச்சோளத்தை ஊடுபயிராக பயிரிடும்போது அலகுளோர் என்ற களைக்கொல்லி மருந்தை பயன்படுத்த வேண்டும்.

குருத்து ஈ, தண்டு துளைப்பான், கதிர்நாவாய், செம்பேன், துரு நோய், தேன் ஒழுகல் நோய், கதிர் பூசாண நோய், அடிச்சாம்பல் நோய் போன்றவை ஏற்பட்டால் வேளாண்அதிகாரிகளை ஆலோசித்து உரிய மருந்துகளை தெளிக்க வேண்டும். கதிர்கள் நன்கு காய்ந்து முற்றிய பிறகு அறுவடை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர்.