Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆடி முதல் செவ்வாய் குமரி அம்மன் கோயில்களில் பெண்கள் குவிந்தனர்: கொழுக்கட்டை, மாவிளக்கு வைத்து வழிபாடு

நாகர்கோவில்: ஆடி மாத முதல் செவ்வாய்க்கிழமைையொட்டி, குமரி மாவட்டத்தில் உள்ள அம்மன் கோயில்களில் இன்று பெண்கள் அதிகளவில் குவிந்தனர். தாழக்குடி அவ்வையாரம்மன் கோயிலில் பெண்கள் கொழுக்கட்டை படைத்து வழிபாடு செய்தனர். மா விளக்கு ஏற்றியும் வழிபட்டனர். தமிழ் மாதங்களில் ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் ஆகும். இந்த மாதத்தில் அம்மன் வழிபாட்டுக்கு முக்கியத்துவம் அளிப்பார்கள். ஆடி அமாவாசை, ஆடி பெருக்கு, ஆடி பவுர்ணமி, ஆடிப்பூரம், வரலட்சுமி விரதம் உள்ளிட்ட நாட்கள் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதே போல் ஆடி மாதத்தில் வரும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளும் விஷேசமாகும். குமரி மாவட்டத்தில் ஆடி மாத செவ்வாய்க்கிழமைகளில் கோயில்களில் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடக்கும்.

அதன்படி இன்று (23ம்தேதி) ஆடி முதல் செவ்வாய் ஆகும். இதையொட்டி அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில், மண்டைக்காடு பகவதியம்மன் கோயில், வடிவீஸ்வரம் அழகம்மன் கோயில், நாகர்கோவில் நடுக்காட்டு இசக்கியம்மன் கோயில், சுசீந்திரம் முன்னுதித்த நங்கையம்மன் கோயில், முப்பந்தல் இசக்கியம்மன் கோயில், ஆலமூடு இசக்கியம்மன் கோயில், மாவட்டத்தில் உள்ள காமாட்சியம்மன் கோயில்கள், ஆதி பராசக்தி கோயில்கள், முத்தாரம்மன் கோயில்கள் உள்ளிட்ட அம்மன் கோயில்களில் இன்று காலையில் சிறப்பு பூஜைகள் நடந்தன. நாகர்கோவில் கிருஷ்ணன்கோவிலில் உள்ள ஆதிபராசக்தி கோயிலில் ஆடி முதல் செவ்வாய்க்கிழமையையொட்டி அதிகாலை 4.30க்கு 18 வகையான சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. தொடர்ந்து கூட்டு தியானம், சிறப்பு வழிபாடு, தீபாராதனை நடைபெற்றது.

பின்னர் பெண்கள் மாவிளக்கு ஏற்றி, அம்மன் கருவறையை சுற்றி வந்து பூஜைகள் செய்தனர். சக்தி பீட தலைவர் சின்னதம்பி தலைமையில் நிர்வாகிகள் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அம்மன் கோயில்களில் செண்பகராமன்புதூர் அருகே உள்ள தாழக்குடி அவ்வையாரம்மன் கோயிலும் ஒன்றாகும். அவ்வைக்கு தனி கோயில் இங்கு தான் அமைந்துள்ளது. ஆடி மாதம் செவ்வாய்க்கிழமைகளில் இங்கு பெண்கள் அதிகளவில் வந்து கொழுக்கட்டை படையல் வைத்து அம்மனை வழிபாடு செய்வார்கள். குமரி மாவட்டம் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் அதிகளவில் பக்தர்கள் வருவது வழக்கமாக உள்ளது. அதே போல் இன்று ஆடி முதல் செவ்வாய்கிழமையையொட்டி பெண்கள் குவிந்தனர். ஆட்டோக்கள், கார்கள், பைக்குகளில் பக்தர்கள் அதிகளவில் வந்திருந்தனர்.

அவர்கள் கோயில் மண்டபத்தில் கொழுக்கட்டை சமைத்து, அம்மனுக்கு வழிபாடு செய்தனர். திருமணமாகாத கன்னிப்பெண்கள் இங்கு வந்து வழிபட்டால், மனதுக்கு பிடித்த மணமகன் கிடைப்பான் என்று நம்பிக்கை உள்ளது. மேலும் திருமணமான புதுமண தம்பதிகள் வந்து வழிபட்டால், குழந்தைபேறு நிச்சயம் என்ற நம்பிக்கையும் உள்ளது. இதனால் இளம்பெண்கள் அதிகளவில் வந்திருந்தனர். பக்தர்களின் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இதே போல், முப்பந்தல் இசக்கியம்மன் கோயிலுக்கும், நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. வடசேரி பஸ் நிலையத்தில் இருந்து திருநெல்வேலி மார்க்கமாக செல்லும் பஸ்கள், முப்பந்தல் இசக்கியம்மன் கோயிலில் நின்று நின்ற அனுமதிக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் சிரமம் இல்லாமல் பயணித்தனர்.