சென்னை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் ஹாக்கி இந்தியா இணைந்து நடத்தும் 14வது ஆடவர் ஹாக்கி இளையோர் உலகக்கோப்பைப் போட்டிக்கான வெற்றி கோப்பையை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிமுகப்படுத்தினார். 14வது ஆடவர் ஹாக்கி இளையோர் உலகக்கோப்பைப் போட்டி, தமிழ்நாட்டில் சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டரங்கம் மற்றும் மதுரையில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ஹாக்கி விளையாட்டரங்கம் ஆகிய இரு இடங்களிலும் 28.11.2025 முதல் 10.12.2025 வரை சிறப்பாக நடைபெற உள்ளது.
இளையோர் ஆண்கள் ஹாக்கி உலகக்கோப்பை போட்டி, தமிழ்நாட்டில் முதன்முறையாக நடைபெறும் போட்டியாகும். இப்போட்டியில் 24 நாடுகளை சேர்ந்த இளம் ஹாக்கி அணிகள் பங்கேற்க உள்ளனர். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் ஹாக்கி இந்தியா இணைந்து நடத்தும் இப்போட்டிக்கென தமிழ்நாடு அரசு 44.36 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்நிகழ்வில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர் முருகானந்தம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி, இந்திய ஹாக்கி சங்க தலைவர் திலிப் திர்கி, செயலாளர் போலாநாத் சிங், பொருளாளர் சேகர் மனோகரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
