Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆதம்பாக்கம் குடியிருப்பில் பரிதாபம்; வீடு தீப்பிடித்து டாக்டர் மனைவி பலி: பாத்ரூம் கதவை பூட்டியதால் டாக்டர், மகன், மகள் தப்பினர்

ஆலந்தூர்: ஆதம்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் முதல் மாடியில் உள்ள வீடு தீப்பிடித்து எரிந்ததில் டாக்டர் மனைவி உடல் கருகி இறந்தார். பாத்ரூம் கதவை பூட்டிக்கொண்டதால் டாக்டர், அவரது மகன், மகள் ஆகியோர் உயிர் தப்பினர். சென்னை மேற்கு வேளச்சேரி ஆதம்பாக்கம் ராமகிருஷ்ணாநகர் 2வது மெயின் ரோட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் முதல் தளத்தில் வசித்துவந்தவர் டாக்டர் ஆனந்த பிரதாப் (64). இவர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி சசிபாலா (58). இவர்களது மகள் பூஜா ஆனந்த்(24) இவரும் டாக்டர். மகன் ரோகித் ஆனந்த் (23) இவர் இன்ஜினியராக உள்ளார்.

நேற்றிரவு அனைவரும் சாப்பிட்டு முடித்துவிட்டு சிறிதுநேரம் பேசிவிட்டு பின்னர் அவர்களது அறைகளுக்கு தூங்க சென்றுள்ளனர்.

இன்று அதிகாலை வீட்டுக்குள் பயங்கர நெடி வந்ததால் 4 பேருக்கும் மூச்சுத் திணறல் ஏற்பட்டு எழுந்து வேகமாக வெளியே வர முயன்றுள்ளனர். அதற்குள் மின்சார வயர்கள் தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த டாக்டர் ஆனந்த் பிரதாப் உடனடியாக அனைவரையும் குளியலறைக்கு இழுத்துச்சென்று கதவை பூட்டிக்கொண்டு காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று கூச்சல் போட்டுள்ளனர். அந்த சமயத்தில் சசிபாலா, ஒரு பொருளை எடுப்பதற்காக கதவை திறந்து வெளியே சென்றபோது அங்கு படர்ந்திருந்த தீயில் சிக்கி தவித்து உள்ளார். தங்களது கண்முன்னே உடல் முழுவதும் தீ பரவி கதறிய நிலையில் அவரை காப்பாற்ற முடியாமல் குடும்பத்தினர் கதறியுள்ளனர். இதனிடையே டாக்டர் வீட்டில் இருந்து புகை வெளியேறுவது பார்த்து அக்கம்பக்கத்து வீட்டினர் திரண்டு வந்ததால் பரபரப்பு நிலவியது.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் ஆதம்பாக்கம் போலீசார் மற்றும் வேளச்சேரி, அசோக் நகர் ஆகிய பகுதிகளில் இருந்து தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதன்பின்னர் ஏணி மூலம் ஏறிச்சென்று குளியல் அறையின் ஜன்னலை உடைத்து உள்ளே சென்ற வீரர்கள், அங்கு மயங்கி கிடந்த டாக்டர், அவரது மகன், மகள் ஆகியோரை மீட்டு வெளியே கொண்டுவந்து உடனடியாக சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதன்பின்னர் தீயை முழுவதுமாக அணைத்து பக்கவாட்டு ஜன்னலை உடைத்து இறந்து கிடந்த சசிபாலா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இந்த தீ விபத்து குறித்து ஆதம்பாக்கம் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

மின் கசிவு காரணமாக தீ விபத்து நடந்துள்ளதாக தெரிகிறது. தீ விபத்தில் பலியான சசிபாலா. இவர் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதி முன்னாள் தேமுதிக எம்எல்ஏவும் தற்போது திமுகவில் உள்ளவருமான சி.எச். சேகரின் சகோதரி ஆவார்.