நடிகை விஜயலட்சுமி பாலியல் வழக்கு விவகாரத்தில் சீமான் மன்னிப்பை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு: புதிய பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவு
புதுடெல்லி: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பாலியல் உறவு வைத்துக்கொண்டு பின்னர் ஏமாற்றியதாக வளசரவாக்கம் போலீசில் நடிகை விஜயலட்சுமி புகார் செய்திருந்தார். இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.வி.நாகரத்னா மற்றும் ஆர்.மகாதேவன் ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது அப்போது சீமான் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரபு, ‘‘ மன்னிப்பு தெரிவித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளோம். ஆனால் நடிகை விஜயலட்சுமி புதிதாக சுமார் 5,000 வீடியோக்களை வெளியிட்டுள்ளார்என தெரிவித்தார்.
இதையடுத்து அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘‘ இந்த விவகாரத்தில் சீமான் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மன்னிப்பு பிரமாணப் பத்திரத்தை நாங்கள் பரிசீலனை செய்தோம். அதில் எங்களுக்கு திருப்தி இல்லை. அதாவது சீமான் தரப்பில் குறிப்பிடப்பட்ட மன்னிப்பு என்பது சரியான தோரணையா?. அதனை கண்டிப்பாக ஏற்க முடியாது என்று காட்டமாக தெரிவித்தனர். இதையடுத்து அதற்கு பதிலளித்த சீமான் தரப்பு வழக்கறிஞர், ‘‘எதிர் தரப்பு மனுதாரரான விஜயலட்சுமியும் மன்னிப்பு கேட்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். ஆனால் அதனை நிராகரித்த விஜயலட்சுமி தரப்பு, நாங்கள் பாதிக்கப்பட்டவர்கள், எதற்காக நாங்கள் மன்னிப்பு கேட்க வேண்டும். குறிப்பாக சீமான் அரசியல் செல்வாக்கு உள்ளவர் என்பதால் பல இடங்களிலும் தன்னைப்பறி அவதூறு மற்றும் வன்மமான செய்திகளை ஊடகங்களிடம் தெரிவித்து வருகிறார் என்று தெரிவித்தார்.
இதையடுத்து இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள்,‘‘இந்த விவகாரத்தில் இரு தரப்பும் அனைத்து புகார்களையும் திரும்ப பெற வேண்டும். குறிப்பாக சீமான் மற்றும் விஜயலட்சுமி ஆகிய இரு தரப்பும் அனைத்து புகார்களையும் திரும்ப பெற்றதையும், மன்னிப்பு கோரியதையும் பிரமாண பத்திரமாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். அதேநேரத்தில் நீதிமன்றத்தில் இருக்கும் வழக்கு மற்றும் அதன் சாராம்சங்கள் குறித்து சீமான் மற்றும் விஜயலட்சுமி ஆகியோர் ஊடகங்களுக்கு எந்த ஒரு பேட்டியோ அல்லது வீடியோவோ வெளியிடக் கூடாது என்று உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.