சென்னை: நடிகை கவுரி கிஷனை யூடியூபர் ஒருவர் பாடி ஷேமிங் செய்த விவகாரம் தொடர்பாக நடிகர்கள் சங்கம், நடிகை குஷ்பு, பாடகி சின்மயி கண்டனம் தெரிவித்துள்ளனர். இது குறித்து தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர், செயலாளர் விஷால் வெளியிட்ட அறிக்கை: பத்திரிகையாளர் சந்திப்புகளில் ஒரு சில வக்கிரமான நபர்கள் பத்திரிகையாளர்கள் போர்வையில் நடிகைகளைப் பார்த்து ஏளனமாக கேள்வி கேட்பதும் அவமானப்படுத்துவது கவலை அளிக்கிறது. நேற்று முன்தினம் எங்களது சகோதரி (கவுரிகிஷன்) ஒருவருக்கு நிகழ்ந்த நிகழ்வு அதே நபரால் சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு இன்னொரு சகோதரிக்கும் நிகழ்ந்தது.
இன்றைய சூழலில் செல்போன் இருந்தால் ஒரு யூடியூப் சேனலை ஆரம்பித்து பத்திரிகையாளர் ஆகிவிடலாம், திரைத்துறையினர் பற்றி அவதூறுகளை ஆபாசமாகப் பரப்பி பார்வையாளர்களைப் பெற்று விடலாம் என்ற மோசமான நிலை நிலவுகிறது. இந்தச் சூழலில் எங்களுக்குப் பாதுகாப்பாக இருக்க வேண்டிய பத்திரிகை துறையில் இது போன்ற களைகள் முளைத்திருப்பது நாம் அனைவரும் ஒன்று கூடி பேசி சரியான முடிவு எடுக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தி உள்ளது. நேற்று எங்கள் சகோதரிக்கு நடந்த சம்பவத்தை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். இனி எதிர்காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நடக்காதவாறு கலந்து ஆலோசிக்க தேவையான முன்னெடுப்புகளைத் தொடங்குவோம்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் பாடகி சின்மயி தனது எக்ஸ் பக்கத்தில், ‘‘கௌரி அந்த கேள்வியையும் சூழலையும் மிகவும் அற்புதமாக கையாண்டார். அவமரியாதையான தேவையற்ற கேள்விகளைக் கேட்டவருக்கு தகுந்த பதிலடி கொடுத்துள்ளார். இது மட்டும் இல்லாமல், இவ்வளவு இளம் வயதில் தனது நிலைப்பாட்டில் மிகவும் உறுதியாக நின்றதற்கு தனி பாராட்டுகள். எந்த நடிகரிடமும் அவரது எடை என்ன என்று கேட்பதில்லை. ஒரு நடிகையிடம் ஏன் கேட்டார்கள் என்று தெரியவில்லை’’ என்று பதிவிட்டுள்ளார்.
நடிகை குஷ்பு வெளியிட்ட பதிவில், ‘‘ஒரு பெண்ணின் எடை எவ்வளவு என்று கேட்பது அவர்களின் வேலை இல்லை. அதைப் பற்றி ஹீரோவிடம் கேட்பது தானே?? என்ன ஒரு அவமானம். தனது நிலைப்பாட்டில் நின்று அதற்குப் பதிலடி கொடுத்த இளம் பெண் கௌரிசங்கருக்கு பாராட்டுகள். கேள்வி கேட்பவர்களின் குடும்பங்களில் உள்ள பெண்களைப் பற்றி அதே கேள்வியைக் கேட்டால் சரியா? மரியாதை ஒருபோதும் ஒரு வழி போக்குவரத்து அல்ல. மதிக்கப்பட வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்த்தால் மரியாதை கொடுக்க கற்றுக்கொள்ளுங்கள்’’ என ஆவேசமாக கூறியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக நடிகை ரோகிணி, இயக்குநர் பா.ரஞ்சித் ஆகி யோர் மலையாள நடிகர் சங்கம் (அம்மா) கண்டனம் தெரிவித்துள்ளனர்.
* சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் கண்டனம்
சென்னை பத்திரிகையாளர் மன்ற தலைவர் சுரேஷ் வேதநாயகம், பொதுச்செயலாளர் அசீப் ஆகியோர் விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: பெண் கலைஞரின் உடல் எடையை கேலிக்கு உள்ளாகும் நோக்கத்தோடு கேள்வி கேட்பது அநாகரீகமானது, அருவருக்கத்தக்கது. குறிப்பாக இக் கேள்விக்கு திரை கலைஞர் கெளரி கிஷன் தனது எதிர்ப்பை தெரிவித்த பிறகும் உடல் எடை குறித்து கேள்வியை நியாயப்படுத்தி பெண் திரைக் கலைஞரை நோக்கி கடினமான குரலில் எதிர் விவாதம் நடத்திய யூடியுபரின் செயல்பாடுகளை சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் வன்மையாகக் கண்டிப்பதோடு இதுபோன்று அருவருக்கத்தக்க ஆணாதிக்க மொழியில் செயல்படுகிறவர்களை சக பத்திரிக்கையாளர்கள் கேள்விக்கு உட்படுத்த வேண்டும் என சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது. மேலும் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூட்டாக பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும், திரை கலைஞர் கெளரி கிஷன் தனது கருத்துக்களை ஆணித்தரமாக எடுத்துரைத்த செயல்பாடுகளுக்கு சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்கிறது.

