புதுடெல்லி: ராமலீலாவில் ராவணன் மனைவி வேடத்தில் நடிகை பூனம் பாண்டே நடிப்பதற்கு, அவரது சர்ச்சைக்குரிய கடந்த காலத்தை காரணம் காட்டி இந்து அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டை மைதானத்தில், லவ குஷ் ராமலீலா குழு சார்பில் ஆண்டுதோறும் ராமலீலா நாடகம் நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான நாடகத்தில் ராவணனின் மனைவி மண்டோதரி வேடத்தில் பிரபல நடிகை பூனம் பாண்டே நடிக்க உள்ளார். ஆபாச நடிகையாக கருதப்படும் பூனம் பாண்டேயின் சர்ச்சைக்குரிய கடந்த காலத்தை சுட்டிக்காட்டி, இந்த கதாபாத்திரத்தில் அவர் நடிப்பது பக்தர்களின் மனதை புண்படுத்தும் எனக் கூறி, விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக ராமலீலா குழுவுக்கு விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் நிர்வாகி சுரேந்திர குப்தா எழுதியுள்ள கடிதத்தில், ‘ராமலீலா என்பது வெறும் நாடகம் அல்ல; அது இந்திய பாரம்பரியத்தின் அடையாளம். மண்டோதரி கதாபாத்திரம் நல்லொழுக்கம், கண்ணியம், கட்டுப்பாடு மற்றும் சிறந்த மனைவிக்கான இலக்கணமாக பார்க்கப்படுகிறது. எனவே, ஒரு நடிகையின் பொது வாழ்க்கை அந்த கதாபாத்திரத்தின் மாண்புடன் ஒத்துப்போக வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்துள்ள ராமலீலா குழுவின் தலைவர் அர்ஜுன் குமார், ‘தவறு செய்தவர்களுக்கும் திருந்தி வாழ ஒரு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.
சர்ச்சைக்குரிய பின்னணி கொண்ட ஆண்களை அரசியலில் ஏற்கும்போது, பெண்களுக்கும் அந்த வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்’ என்று கூறியுள்ளார். இதனிடையே, இந்த வாய்ப்பு தனக்கு கிடைத்த கவுரவம் என பூனம் பாண்டே தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.