Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நடிகையாக இருந்தபோது சொகுசு வாழ்க்கை; அரசியல்வாதியாக இருப்பது ரொம்ப வேதனை: மாதவிடாய் குறித்து பாஜக நடிகை கங்கனா ரனாவத் புது விளக்கம்

புதுடெல்லி: அரசியல்வாதியாக மாதவிடாய் சுகாதாரத்தை பேணுவதில் உள்ள சவால்கள் குறித்தும், மாதவிடாய் காலத்தில் பெண்களின் உடலில் இருந்து எதிர்மறை ஆற்றல் வெளிப்படும் என்பதால் அவர்கள் கோயில்கள் மற்றும் சமையலறைகளுக்குள் செல்லாமல் ஓய்வெடுப்பதே சிறந்தது என்றும் நடிகை கங்கனா ரனாவத் கூறியது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பாலிவுட் நடிகையும், பாஜக எம்பியுமான கங்கனா ரனாவத், அவ்வப்போது தனது கருத்துக்களை எவ்வித அச்சமுமின்றி வெளிப்படையாக பேசக்கூடியவர். சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், அரசியல்வாதியாக பெண்களின் மாதவிடாய் கால சுகாதாரத்தை பேணுவதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் குறித்து மனம் திறந்து பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், ‘நடிகையாக இருந்தபோது எனக்கு எல்லாவித வசதிகளும், சொகுசும் கிடைக்கும். படப்பிடிப்பு தளங்களில் நடிகைகளுக்கென தனி வேன்கள் இருக்கும். அங்கு தேவையான அளவு நாப்கின்களை மாற்றிக்கொள்ளலாம்; அங்கேயே குளிக்கலாம். ஆனால், அரசியல்வாதியின் வாழ்க்கை என்பது முற்றிலும் வேறுபட்டது. கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு 12 மணி நேரம் பயணிக்கிறோம். பெண்கள் கழிப்பறைக்குச் செல்லக்கூட இடமில்லை. பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கூட, மிகப் பெரிய பிரச்னையாக இருக்கிறது. இதை பேரழிவு என்றுதான் கூற வேண்டும். எனது ஆரம்பகால மாதவிடாய் நாட்களில் கோயிலுக்கோ, சமையலறைக்கோ செல்ல வேண்டாம்; ஓய்வெடுக்குமாறு என் குடும்பத்தினர் அறிவுறுத்தினர்.

ஏனெனில், அந்த நாட்களில் மிகவும் அசுத்தமாக இருப்பதாக உணர்வேன். அனைவரையும் அறைய வேண்டும் என்பது போலத் தோன்றும். பெண்ணின் அந்த சோகமான நிலைமையில், அவரது உடலில் இருந்து எதிர்மறை ஆற்றல் வெளிப்படுகிறது. அதனால்தான் அந்த நேரத்தில் பெரும்பாலான பெண்கள் தங்களுக்கு அருகில் ஒருவர் மூச்சு விடுவதைக்கூட பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். அத்தகைய நிலையில், நீங்கள் யாருக்கும் சமைக்காமல் இருப்பது நல்லது. வேறு வழியில்லாதவர்கள், உதாரணமாக தனியாக வசிக்கும் பெண்கள் சமையலறைக்குச் சென்றுதான் ஆக வேண்டும். ஆனால், மற்றபடி மாதவிடாய் காலம் என்பது ஓய்வெடுக்க வேண்டிய நேரமே’ என்று அவர் கூறியுள்ளது சமூக வலைதளங்களில் புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது.