திருவனந்தபுரம்: பிரபல மலையாள நடிகையான நவ்யா நாயர் கடந்த சில தினங்களுக்கு முன் ஓணம் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக ஆஸ்திரேலியாவில் உள்ள விக்டோரியா நகருக்கு சென்றிருந்தார். கொச்சியிலிருந்து சிங்கப்பூர் வழியாக இவர் விமானத்தில் சென்றார். இதற்காக மெல்போர்ன் விமான நிலையத்தில் இவருக்கு ஒன்றே கால் லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதுகுறித்து ஓணம் பண்டிகையின்போது நடிகை நவ்யா நாயர் வேதனையுடன் கூறியதாவது: நான் கொச்சியில் இருந்து இங்கு வரும்போது என்னுடைய தந்தை தலையில் வைப்பதற்காக பூ வாங்கித் தந்தார். அதை இரண்டு துண்டுகளாக்கி ஒன்றை தலையில் வைத்து ஒரு முழம் நீளமுள்ள இன்னொரு துண்டை நான் கைப்பையில் வைத்திருந்தேன்.
மெல்போர்ன் விமானநிலையத்தில் இறங்கிய பின்னர் என்னுடைய கைப்பையில் சோதனையிட்ட அதிகாரிகள், பூ வைத்திருந்த குற்றத்திற்காக எனக்கு 1980 டாலர் (இந்திய மதிப்பில் 1.25 லட்சம் ரூபாய்) அபராதம் விதித்தனர். விமானத்தில் பயணம் செய்யும்போது கைப்பையில் பூ கொண்டு வரக்கூடாது என்பது இங்குள்ள சட்டம் என்று எனக்குத் தெரியாது. வெறும் 15 செமீ பூவுக்காக எனக்கு ஒன்றேகால் லட்சம் ரூபாய் அபராதம் கிடைத்தது. தெரியாமல் செய்தாலும் தவறு தவறுதான். 28 நாட்களுக்குள் அபராதத்தை கட்ட வேண்டும் என்று அதிகாரிகள் என்னிடம் கூறியுள்ளனர் என்றார்.