பாகிஸ்தானில் 20 நாட்களுக்கு பின்னர் அழுகிய நிலையில் நடிகையின் சடலம் மீட்பு: வாடகை பாக்கி வசூலிக்க சென்றபோது அதிர்ச்சி
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் 20 நாட்களுக்கு பின்னர் அழுகிய நிலையில் நடிகையின் சடலம் மீட்கப்பட்டது. அவரிடம் வாடகை பாக்கி வசூலிக்க சென்றபோது அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். உலகளவில் சினிமா துறை பிரபலங்களின் திடீர் மரணங்கள் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகின்றன. சமீபத்தில், ‘கில் பில்’ போன்ற புகழ்பெற்ற திரைப்படங்களில் நடித்த ஹாலிவுட் நடிகர் மைக்கேல் மேட்சன் தனது 67வது வயதில் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள், பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பிரபல நடிகையும், மாடல் அழகியுமான ஹுமைரா அஸ்கர் தனது 32வது வயதில் மரணமடைந்த செய்தி வெளியாகியுள்ளது.
இவர், பாகிஸ்தானில் பிரபலமான ‘தமாஷா கர்’ ரியாலிட்டி ஷோ மூலமாகவும், ‘ஜிலேபி’ என்ற திரைப்படம் மூலமாகவும் பரவலாக அறியப்பட்டவர். பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள தனது குடியிருப்பில் கடந்த ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக ஹுமைரா அஸ்கர் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில், அவர் சுமார் ஒரு வருடத்திற்கும் மேலாக வீட்டு வாடகை செலுத்தாததால், வீட்டை காலி செய்யுமாறு நீதிமன்றம் போலீசாருக்கு உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவின் பேரில் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்ற அதிகாரிகளுக்குப் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு ஹுமைரா அஸ்கரின் உடல், அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
அவர் இறந்து சுமார் 20 நாட்கள் ஆகியிருக்கலாம் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வீட்டில் யாரும் வலுக்கட்டாயமாக நுழைந்ததற்கான தடயங்கள் இல்லாததால், இது கொலையாக இருக்க வாய்ப்பில்லை என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. இருந்தாலும் ஹுமைரா அஸ்கரின் மரணத்திற்கான உண்மையான காரணம் குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.