சென்னை: சின்னத்திரை நடிகை மான்யா ஆனந்த் தனது பேட்டியில், சினிமா வாய்ப்பு தருவதாகக் கூறி வந்த அழைப்பு குறித்து விரிவாகப் பேசியிருந்தார். அதில் அவர் குறிப்பிட்ட முக்கியமான தகவல்கள் பின்வருமாறு: ”நடிகர் தனுஷின் மேனேஜர் ஸ்ரேயாஸ் பேசுகிறேன், தனுஷ் புதுசா ஒரு படத்தை இயக்கப் போகிறார். அதில் நடிப்பீர்களா?” என்று ஒரு நபர் மெசேஜ் செய்திருந்தார்.
அதற்கு மான்யா ஆனந்த் தனது சில நிபந்தனைகளை (அதாவது அதிக கவர்ச்சியாக நடிக்க மாட்டேன்) தெரிவித்த பிறகு, அந்த நபர், ”இந்த வாய்ப்புக்காக கமிட்மென்ட் இருக்கும்” என்று சொன்னார். உடனே மான்யா ஆனந்த், ”கமிட்மென்ட் செய்ய மாட்டேன்” என்று சொன்னதும், அந்த நபர், ”தனுஷ் கூப்பிட்டாலும் போக மாட்டியா?” என்று மீண்டும் வற்புறுத்தி உள்ளார். அதற்கு முடியாது என்று அவர் திட்டி விட்டாராம். அதன் பின் மற்றொரு நம்பரில் இருந்து இதேபோன்ற அழைப்பு தனக்கு வந்தது எனவும், அந்த நபர் தனக்கு ஸ்கிரிப்டை கூட அனுப்பினார் எனவும் மான்யா ஆனந்த் பேட்டியில் தெரிவித்திருந்தார். இந்தப் பேட்டியில் அட்ஜெஸ்ட்மென்ட் பகுதி மட்டும் சமூக ஊடகங்களில் பரவி, நடிகர் தனுஷை நோக்கி விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில், மான்யா ஆனந்த் வெளியிட்ட அறிக்கையில் ”முதலில் அந்தப் பேட்டியை முழுமையாகப் பாருங்கள். தனுஷ் மேனேஜர் ஸ்ரேயாஸ் பெயரைப் பயன்படுத்தி பொய்யான ஒரு நபர் அப்படிச் செய்து இருக்கலாம் என்றுதான் நான் கூறியிருக்கிறேன். அந்த போன் நம்பரை தனுஷ் சார் டீமுக்கு அனுப்பி, அது யார் என விளக்கம் கேட்டிருப்பதாகவும் கூறியிருக்கிறேன்.” இதன் மூலம் நடிகர் தனுஷையோ, அவரது உண்மையான மேலாளரையோ தான் குறை கூறவில்லை என்பதை அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.


