Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தர்மம் இருந்தால் மட்டுமே இந்தியா ஒழுங்காக இயங்கும் மோடி ஆட்சியில் தான் சந்நியாசிகளுக்கு முக்கியத்துவம்: சாமியாராக மாறிய நடிகை பரபரப்பு பேட்டி

புதுடெல்லி: தர்மம் இருந்தால் மட்டுமே இந்தியா ஒழுங்காக இயங்கும். பிரதமர் மோடி ஆட்சியில் தான் சந்நியாசிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்று சாமியாராக மாறிய நடிகை மம்தா குல்கர்னி பரபரப்பு பேட்டி அளித்தார். பாலிவுட் முன்னாள் நடிகை மம்தா குல்கர்னி, கடந்த 1990களில் ‘கரண் அர்ஜுன்’, ‘ஆஷிக் ஆவாரா’ போன்ற படங்களில் நடித்து புகழ்பெற்றவர். கடந்த 2000ம் ஆண்டு முதல் இந்தியாவை விட்டு வெளியேறிய அவர், 2012ல் கும்பமேளாவில் பங்கேற்க இந்தியா திரும்பினார்.

2016ல் 2000 கோடி ரூபாய் போதைப்பொருள் வழக்கில் சிக்கியதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. கடந்த 2024 டிசம்பரில், மும்பை உயர்நீதிமன்றம் அவர் மீதான குற்றச்சாட்டை நிராகரித்து, அவரை குற்றமற்றவர் என்று தீர்ப்பளித்து. மேலும் அவர் மீதான எப்ஐஆரை ரத்து செய்தது. இதனைத் தொடர்ந்து கிட்டத்திட்ட 25 ஆண்டுகளுக்குப் பிறகு மும்பை திரும்பினார். தற்போது, அவர் அயோத்தியில் நடந்த ராமர் கோயில் பிராண பிரதிஷ்டை விழாவையும், பிரதமர் மோடி மற்றும் உத்தரப்பிரதேச அரசுக்கு பாராட்டு தெரிவித்தார்.

இந்நிலையில் அவர் அளித்த பேட்டியில், ‘பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சிகாலத்தில் தான் ரிஷிகளுக்கு (சந்நியாசிகள்) சமூகத்தில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இந்தியா ரிஷிகளின் நாடு. வேதங்கள் மற்றும் மத நூல்கள் ரிஷிகள் மூலம் கிடைத்தவை. இந்த பண்பாடு தர்மத்தை பாதுகாக்க அவைகளை மேம்படுத்த வேண்டும். தர்மம் இருந்தால் மட்டுமே இந்தியா ஒழுங்காக இயங்கும்; அதர்மம் ஆதிக்கம் செலுத்தினால் எல்லாம் முடிந்துவிடும். விரைவில் அயோத்திக்கு செல்ல உள்ளேன்’ என்றார்.

முன்னதாக நடந்த மகா கும்பமேளாவிற்கு வந்த மம்தா குல்கர்னி, செக்டர் 16-ல் உள்ள கின்னர் அகாடா தலைவரான ஆச்சார்யா டாக்டர் லஷ்மி நாராயண் திரிபாதியிடம் ஆலோசனை நடத்தினார். அப்போது அவரிடம் தனக்கு மகா மண்டலேஷ்வர் பதவி அளிக்கும்படியும், முழுத்துறவறம் மேற்கொள்ளத் தயார் எனவும் தெரிவித்தார். இதற்கான நிபந்தனைகளையும் நடிகை மம்தா குல்கர்னி ஏற்றார். இதற்காக மம்தா, இறந்தபின் அவர்களது குடும்பத்தார் செய்யும் பிண்டதானச் சடங்கை அவர் தனக்குத் தானே செய்து கொண்டார்.

தொடர்ந்து திரிவேணி சங்கமத்தில் புனிதக் குளியலை முடித்தவருக்கு மகா மண்டலேஷ்வர் பதவி அளிக்கும் முறைகள் துவங்கின. இதை கின்னர் அகாடாவுக்காக ஜுனா அகாடாவினர் செய்து வைத்தனர். இந்த நிகழ்வுக்குப் பின் மம்தாவுக்கு ஷியாமாய் மம்தாணந்த் கிரி என புதிதாக பெயர் சூட்டப்பட்டது. ருத்ராட்ச மாலைகள் அணிந்து காவி உடையில் உலா வருகிறார். பாலிவுட் நடிகைகளில் முதலாவதாகத் துறவறம் பூண்டவராக மம்தா குல்கர்னி கருதப்படுகிறார்.