நியூயார்க்: குடிபோதையில் கார் ஓட்டிய வழக்கில், பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி நடிகை காமில் லாம்ப் கைது செய்யப்பட்டார். அமெரிக்காவின் பிராவோ தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பிலோ டெக்’ என்ற புகழ்பெற்ற ரியாலிட்டி நிகழ்ச்சியின் 10வது எபிசோட்டில் பணிப்பெண்ணாக நடித்த நடிகை காமில் லாம்ப், படபிடிப்பு நிகழ்ச்சியின்போது பணியில் மது அருந்தியது, சக ஊழியரான அலிசா ஹம்பருடன் தொடர்ந்து சண்டையிட்டது மற்றும் பணியில் ஆர்வமின்றி செயல்பட்டது போன்ற காரணங்களுக்காக, 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் அதிரடியாக நீக்கப்பட்டார்.
இந்நிலையில், காமில் லாம்ப் கடந்த 11ம் தேதி மிசிசிப்பி மாகாணத்தில் குடிபோதையில் கார் ஓட்டியபோது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அதிகாலை 3 மணியளவில் சிறையில் அடைக்கப்பட்ட அவர், சுமார் 12 மணி நேரத்திற்குப் பிறகு ஆயிரம் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.83,000) பிணைத்தொகை செலுத்தி வெளியே வந்துள்ளார். இந்த கைது சம்பவம் குறித்து காவல்துறை தரப்பிலோ அல்லது காமில் தரப்பிலோ இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியிடப்படவில்லை. ஏற்கனவே மதுப்பழக்கத்தால் படபிடிப்பு நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் அதே காரணத்திற்காக அவர் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.