Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சமூக வலைதளங்களின் மூலம் நடிகை அனுபமா பரமேஸ்வரனுக்கு மிரட்டல்: தமிழக பெண் மீது கேரள போலீசில் புகார்

கொச்சி: பிரபல நடிகை அனுபமா பரமேஸ்வரன், தனக்கு எதிராக சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய தமிழகத்தைச் சேர்ந்த இளம்பெண் மீது கேரள சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். பிரபல மலையாள நடிகையான அனுபமா பரமேஸ்வரன் மற்றும் அவரது குடும்பத்தினரை குறிவைத்து, கடந்த சில காலமாக சமூக வலைதளங்களில் மர்ம நபர்களால் தொடர்ந்து அவதூறுகள் பரப்பப்பட்டு வந்தன.

போலியான கணக்குகள் மூலம் அனுபமாவின் படங்களை மார்ஃபிங் செய்து வெளியிடுவது, அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பரப்புவது என்று இணையவழி துன்புறுத்தல் தொடர்ந்து கொண்டிருந்தது. இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், இந்த திட்டமிட்ட சதிச்செயலுக்குப் பின்னால் இருப்பது தமிழ்நாட்டைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் என்பது தெரியவந்தது. இதையடுத்து, நடிகை அனுபமா பரமேஸ்வரன் கேரள சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் விளக்கம் அளித்துள்ள அனுபமா, அந்த இளம்பெண்ணின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு அவரது அடையாளத்தை வெளியிட விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார். ஆனாலும், சட்டரீதியான நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகக் கூறியுள்ளார். மேலும் இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், ‘சமூக வலைதளங்களை பயன்படுத்துவதாலோ ஒருவரை துன்புறுத்தவோ, அவதூறு செய்யவோ, வெறுப்பை பரப்பவோ யாருக்கும் உரிமை கிடையாது.

இணையவழி துன்புறுத்தல் என்பது மிகவும் தீவிரமான மற்றும் தண்டனைக்குரிய குற்றம் என்பதை அனைவரும் உணர வேண்டும்’ என்று காட்டமாகத் தெரிவித்துள்ளார். இணையவழி கொடுமைகளுக்கு எதிராக நடிகை அனுபமா எடுத்துள்ள இந்தத் துணிச்சலான நடவடிக்கையை அவரது ரசிகர்களும், திரைத்துறையினரும் பாராட்டி வருகின்றனர்.