Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

கரூர் பரப்புரை கூட்டத்தில் நடிகர் விஜய் நோக்கி வாலிபர் செருப்பு வீச்சு: சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்

சென்னை: கரூர் பரப்புரையின் போது நடிகர் விஜய் பேசிக் கொண்டிருந்த போது, கூட்டத்தில் இருந்து வாலிபர் ஒருவர் நடிகர் விஜய் மீது செருப்பு வீசும் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. தவெக தலைவர் நடிகர் விஜய் கடந்த 27ம் தேதி கரூர் பகுதியில் உள்ள வேலுச்சாமிபுரத்தில் பிரசாரம் செய்தார். மாலை 3 மணிக்கு கட்சியின் தலைவர் விஜய் கூட்டத்தில் பேசுவார் என்று கரூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் கடிதம் வழங்கினர். தவெக அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் கரூர் பகுதியில் பகல் 12 மணிக்கு நடிகர் விஜய் பேசுவார் என்று அறிவிக்கப்பட்டது.

இதனால், அன்று காலை 10 மணி முதல் கூட்டம் நடைபெறும் வேலுச்சாமிபுரத்தில் கூட்டம் கூட ஆரம்பித்துவிட்டது. மாலை 3 மணி நிலவரப்படி தவெகவினர் அளித்த மனுவில் கூறப்பட்டபடி 10 ஆயிரம் பேர் கூடினர். ஆனால், சொன்னபடி அந்த நேரத்தில் நடிகர் விஜய் வரவில்லை. இதனால், மாலை 3 மணியில் இருந்து படிப்படியாக கூட்டம் இருமடங்காக உயர்ந்து இரவு 7 மணி வாக்கில் 27 ஆயிரம் பேர் கூடினர். பின்னர், அறிவித்த நேரத்தை கடந்து 4 மணி நேரம் காலதாமதமாக நடிகர் விஜய் கரூர் கூட்டத்திற்கு தனது தொண்டர்கள் பின்தொடர சாலையில் பேரணியாக வந்தார். இதனால், நடிகர் விஜய்யை பார்க்க வேலுச்சாமிபுரத்தில் கூட்டம் முண்டியடித்தது. இதை பார்த்த போலீசார் கூட்டம் அதிகமாக இருப்பதால் 50 மீட்டர் தொலைவில் நின்று பேசும்படி தவெக நிர்வாகிகளிடம் கூறினர்.

ஆனால், போலீசாரின் பேச்சை அவர்கள் கேட்கவில்லை. மேலும், நடிகர் விஜய்யின் பிரசார பேருந்தை கூட்டத்திற்குள் கொண்டு சென்றனர். இதன் காரணமாக கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டது. அப்போதே நெரிசலில் சிக்கி சிறுமி உள்பட பெண்கள் பலர் மயங்கி விழ தொடங்கினர். ஆனால், நடிகர் விஜய்யின் வாகனம் கூட்டத்திற்குள் நுழைந்தபடி இருந்தது. கூட்டத்தில் இருந்து வாலிபர்கள் நெரிசல் தாங்க முடியாமல் முன்னும் பின்னும் நோக்கி செல்ல முடியாமல் திணறினர். ஒரு கட்டத்தல் கூட்ட நெரிசலில் பலர் சிக்கி பொதுமக்கள் மயங்கி விழுந்தனர். இதை பார்த்த கூட்டத்தில் இருந்த வாலிபர் ஒருவர், ‘தனது செருப்பை எடுத்து பரப்புரையில் பேசிக்கொண்டிருந்த நடிகர் விஜய் மீது வீசி.... சிலர் நெரிசலில் சிக்கியதாக சைகையை காட்டுகிறார்’. ஆனால், அப்போது நடிகர் விஜய்யுடன் பாதுகாப்பு பணியில் இருந்த பவுன்சர்கள் அதை தடுத்துவிட்டனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.