திருப்பரங்குன்றம்: மதுரை அருகே கடந்த 21ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில மாநாடு நடைபெற்றது. இதில் பேசிய அக்கட்சி தலைவர் நடிகர் விஜய் முதல்வரை விமர்சித்து பேசினார். அவருடைய கருத்து தரம் தாழ்ந்து இருந்ததாக பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மதுரை தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் இன்று காலை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில், நடிகர் விஜயின் கேலி சித்திர படத்துடன், `வாட் ப்ரோ; ஓவர் ப்ரோ, அடக்கி வாசிங்க ப்ரோ...’ என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.
மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வி.விமல் சார்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த போஸ்டரில், மதுரை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் - அமைச்சர் பி.மூர்த்தி, தெற்கு மாவட்ட செயலாளர் மு.மணிமாறன் ஆகியோரது பெயர்களும் இடம்பெற்றுள்ளன. விஜய்க்கு எதிராக ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டரால் மதுரை மாவட்டத்தில் இன்று காலை பரபரப்பு ஏற்பட்டது.