Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

நாளை செல்வதாக இருந்த நடிகர் விஜயின் கரூர் பயணம் திடீர் ரத்து: இறந்தவர்களின் குடும்பத்தினர் ஏமாற்றம்

சென்னை: கரூருக்கு நாளை செல்வதாக இருந்த நடிகர் விஜயின் பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் இறந்தவர்களின் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கரூரில் கடந்த மாதம் 27ம் தேதி பிரசாரத்துக்கு சென்ற விஜயை பார்க்க ரசிகர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் முன்டியடித்துச் சென்றனர். அப்போது ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் பலியாகினர். 180க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். சம்பவம் நடந்தவுடன் நடிகர் விஜய் மற்றும் அவரது கட்சி நிர்வாகிகள் உடனடியாக காரில் திருச்சி சென்றனர்.

பின்னர் அங்கிருந்து சென்னைக்கு திரும்பி விட்டனர். ஆனால் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள் முகாமிட்டு காயமடைந்தவர்களுக்கான சிகிச்சையை தீவிரப்படுத்தினர். இதனால் பலர் காப்பாற்றப்பட்டனர். ஆனால் கரூர் சம்பவத்திற்குப் பிறகு தவெக வினர் ஒருவர் கூட மருத்துவமனைக்கு செல்லவில்லை. இதனால் தமிழகம் முழுவதும் பொதுமக்கள் கடும் அதிருப்தியும், அதிர்ச்சியும் அடைந்தனர்.

இந்தநிலையில் சம்பவம் நடந்து 20 நாட்களுக்குப் பிறகு கரூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களையும், இறந்தவர்களின் குடும்பத்தினரையும் சந்தித்து ஆறுதல் கூறவும், அவர்களுக்கு நிவாரண உதவி வழங்கவும் விஜய் முடிவு செய்தார். மேலும் இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.20 லட்சம் வழங்கப்படும் என்று விஜய் அறிவித்தார். இந்தப் பணத்தை குடும்பத்தினருக்கு வழங்கவும் முடிவு செய்தார். இதற்காக கரூருக்கு நாளை செல்வதாக திட்டமிட்டார்.

அங்கு 2 மண்டபத்தையும் பார்த்து நிகழ்ச்சி நடத்த தவெகவினர் முடிவு செய்திருந்தனர். ஆனால் இந்த கூட்டத்துக்கு இதுவரை போலீசாரிடம் அவர்கள் அனுமதி வாங்கவில்லை. இதனால் கூட்டம் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் விரைவில் அவர் கரூர் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குவதா? அவர்களை சென்னைக்கு அழைத்து வந்து பனையூரில் உள்ள தனது அலுவலகத்தில் வைத்து நிவாரண உதவிகள் வழங்குவதா என்று விஜய் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே சென்னையில் மழையால் பாதிக்கப்பட்டவர்களையும், துப்புறவு பணியாளர்களையும் தனது வீட்டுக்கு அழைத்து வந்துதான் பார்த்தார். அதேபோல கரூரில் பாதிக்கப்பட்ட மக்களையும் சென்னைக்கு அழைத்து வந்து நிவாரண உதவிகள் வழங்க அவர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இது குறித்து தவெக தரப்பில் இருந்து உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை. ஆனால் கரூருக்கு நாளை செல்வதாக இருந்த திட்டம் மட்டும் ரத்து செய்யப்பட்டதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.