சென்னை: நடிகர் விஜய்யை பாஜ இயக்குகிறதா என்பதற்கு முன்னாள் ஒன்றிய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பதில் அளித்தார். பாஜ முன்னாள் தலைவரும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் தி.நகரில் உள்ள பாஜ தலைமை அலுவலகத்தில் நேற்று அளித்த பேட்டி: கரூரில் நடந்த துயர சம்பவத்தை அரசியலாக்கும் முயற்சி நடந்து கொண்டிருக்கின்றது. இதனை வன்மையாக கண்டிக்கிறேன். 27ம் தேதி அந்த இடத்தில் காவல்துறையினர் எப்படி அனுமதி கொடுத்தார்கள் என்பது மிகவும் ஆச்சரியமாக உள்ளது. 50 அடி அகலம் கொண்ட சாலையில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கூடும் நிகழ்ச்சிக்கு எப்படி அனுமதி அளிக்கப்பட்டது.
தவெக தலைவர் விஜய் தன்னுடைய கூட்டங்களுக்கு கர்ப்பிணி பெண்கள் வயதானவர்கள் சிறுவர்கள் எல்லாம் வர வேண்டாம் என்று ஏற்கனவே அறிக்கை கொடுத்து இருக்கிறார். அவர்களை எல்லாம் தடுத்திருக்க வேண்டிய பொறுப்பில் பலர் இருந்தாலும் அதில் முழு கவனம் செலுத்தி இருக்க வேண்டும். பொதுவாக ஒரு கட்சியின் நிகழ்ச்சி என்று சொன்னால் அந்தக் கட்சியைப் பற்றி அவர்கள் நடைமுறை பற்றி நன்கு தெரிந்த காவல்துறை அதிகாரிகள் முன்னெடுப்புகளை செய்வார்கள். அதன்படி கரூர் நிகழ்ச்சியில் காவல்துறை அதிகாரிகள் இருந்தார்களா என்பது மிகப்பெரிய கேள்வி.
நாமக்கல்லில் 40க்கும் மேற்பட்டவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்று இருக்கிறார்கள். அடுத்ததாக கரூரில் என்ன செய்ய வேண்டும் என்ற அறிவில்லையா? அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டாமா?. விஜய் ஒரு புதிய கட்சியை ஆரம்பித்துள்ளார். நான் யாரையும் நியாயப்படுத்த வரவில்லை. எல்லா மக்களைப்போல அந்த கட்சி சேர்ந்தவர்களுக்கும் அச்சம் இருக்க வாய்ப்பு உண்டு. ஒருமுறை சென்றதற்கு இப்படி நடக்கிறது. மற்றொரு முறை செல்வதற்கு சிந்திப்பார்கள். இவ்வாறு அவர் கூறினர். பின்னர் விஜய்யை பாஜ இயக்குகிறது என்று எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்வது குறித்த கேள்விக்கு,‘‘உரிமை மறுக்கப்பட கூடியவர்கள், பேசுவதற்கு அஞ்சக்கூடியவர்கள் இந்த மண்ணில் வாழ்வதற்கு இடமில்லாமல் போய்விடுமோ என்று அஞ்சுபவர்கள் அத்தனை பேருக்கும் பாஜ துணையாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்” என்றார்.