Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நடிகர் கார்த்தி நடித்து வெளியாகவுள்ள ‘வா வாத்தியார்’ படத்தை வெளியிட ஐகோர்ட் தடை

சென்னை: நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘‘வா வாத்தியார்” திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி உள்ள ‘வா வாத்தியார் திரைப்படத்தை ஸ்டுடியோ கிரின் ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார். இத்திரைப்படத்தை டிசம்பர் 5ம் தேதி (இன்று) திரையரங்குகளில் திரையிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்ற சொத்தாட்சியர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தொழிலதிபர் அர்ஜுன்லால் சுந்தர்தாஸ் என்பவர் திவாலானவர் என கடந்த 2014ம் ஆண்டு அறிவித்து அவருடைய சொத்துகளை நிர்வகிக்க சொத்தாட்சியரையும் நியமித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. திவாலானவர் என அறிவிக்கப்பட்ட அர்ஜூன்லால் சுந்தர்தாஸிடம் இருந்து ஸ்டூடியோ கிரீன் பட தயாரிப்பு நிறுவனம் 10 கோடியே 35 லட்சம் ரூபாய் கடன் பெற்றிருந்தனர். அந்த தொகை வட்டியுடன் சேர்த்து தற்போது 21 கோடியே 78 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயாக உள்ளது.

அந்த தொகையை செலுத்த ஞானவேல் ராஜாவுக்கு உத்தரவிட வேண்டும். அவர் தயாரித்துள்ள வா வாத்தியார் திரைப்படம் வெளியிட இடைக்கால தடை விதிக்க வேண்டும். படம் மூலம் கிடைக்கும் வருவாயை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், சி.குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு, வா வாத்தியார் திரைப்படத்தை 5ம் தேதி வரை வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை டிசம்பர் 8ம் தேதிக்கு தள்ளிவைத்தது.