விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற போது கழிவறையில் பெண்ணை பலாத்காரம் செய்த நடிகர்: புனேயில் கைது செய்த டெல்லி போலீஸ்
டெல்லி: டெல்லியில் நடந்த விருந்து நிகழ்ச்சியின் போது கழிவறையில் வைத்து பெண் ஒருவரை டிவி நடிகர் பாலியல் பலாத்காரம் செய்ததால், தற்போது அவர் புனேயில் கைது செய்யப்பட்டார். பிரபல இந்தி தொலைக்காட்சி நடிகர் ஆஷிஷ் கபூர், பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படும் வழக்கில், புனேவில் வைத்து டெல்லி போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘இன்ஸ்டாகிராம் மூலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆஷிஷ் கபூருடன் பழக்கம் ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட பெண், ஒரு டிவி நிகழ்ச்சி மேலாளராகப் பணியாற்றி வருகிறார். கடந்த ஆகஸ்ட் மாதம் டெல்லியின் சிவில் லைன்ஸ் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நடைபெற்ற விருந்தின்போது, கழிவறையில் வைத்து ஆஷிஷ் கபூர் தன்னை வற்புறுத்திப் பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்தப் பெண் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கில் முதலில் ஆஷிஷ் கபூர், அவரது நண்பர், நண்பரின் மனைவி மற்றும் அடையாளம் தெரியாத இருவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. ஆனால், பாதிக்கப்பட்ட பெண் பின்னர் தனது வாக்குமூலத்தை மாற்றி, ஆஷிஷ் கபூர் மட்டுமே தன்னைப் பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறியுள்ளார். மேலும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தின் வீடியோ தன்னிடம் இருப்பதாகவும் அந்தப் பெண் கூறியுள்ளார்; ஆனால் அத்தகைய வீடியோ எதுவும் இதுவரை போலீசிடம் ஒப்படைக்கவில்லை. இந்தச் சம்பவம் தொடர்பாக சிவில் லைன்ஸ் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது’ என்று கூறினர்.