புதுடெல்லி: ரேணுகாசாமியை கொலை செய்த வழக்கில் கன்னட நடிகர் தர்ஷன் கடந்தாண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கர்நாடகா காவல்துறை தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிக்கையிலும் நடிகர் தர்ஷனின் பெயர் இடம் பெற்றிருந்த நிலையில் அறுவை சிகிச்சை செய்வதற்காக இடைக்கால ஜாமின் வழங்க வேண்டும் என கன்னட நடிகர் தர்ஷன், கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து, கடந்தாண்டு அக்டோபர் 30ம் தேதி இடைக்கால ஜாமீன் வழங்கி கர்நாடகா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர் இடைக்கால ஜாமீன் டிசம்பர் 13ம் தேதி வழக்கமான ஜாமீனாக வழங்கப்பட்ட நிலையில், நடிகர் தர்ஷனுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கர்நாடகா அரசு வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கின் விசாரணை கடந்த ஜனவரி மாதம் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா, ஆர்.மகாதேவன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது எதிர்மனுதாரர்கள் பதிலளிக்குமாறு நோட்டீஸ் பிறப்பித்த நீதிபதிகள், தர்ஷனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதை மேற்கோள்காட்டி மற்றவர்களுக்கு ஜாமின் வழங்க கூடாது என்பதை தெளிவுபடுத்தி வழக்கை ஒத்திவைத்தனர். இந்நிலையில் இவ்வழக்கின் விசாரணை இன்று மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நடிகர் தர்ஷன் உள்ளிட்ட 5 பேருக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். முன்னதாக, குற்றம் சாட்டப்பட்டவர் சமூகத்தில் எவ்வளவு உயர்ந்தவராக இருந்தாலும் சட்டத்திற்கு முன்பு அவர் உயர்ந்தவர்கள் அல்ல என்றும் கூறினர்.