திருவாரூர்: ஒரு கட்சியை எப்படி நடத்துவது, தொண்டர்களை எப்படி தயார் செய்வது என்று இனிமேலாவது விஜய் பாடம் படிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் முன்னாள் மாநில செயலாளரும், தேசிய கட்டுப்பாட்டு குழு உறுப்பினருமான முத்தரசன் கூறினார்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தெற்கு வீதியில் இந்திய கம்யூனிஸ் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் முத்தரசன் பேசியதாவது:
நமது கட்சி கூட்டத்தில் யாராவது ஒருவர் கீழே விழுந்தா அப்படியே விட்டுவிடுமோ? உயிரை கொடுத்து காப்பாத்துவோம். நீ(விஜய்) பாட்டுக்கு துண்ட காணோம், துணியை காணோம் என்று ஓடி விட்டாய். உனக்கு கீழ் உள்ளவர்களும் ஓடிவிட்டனர். 3 நாட்கள் கழித்து அறிக்கை விடுகிறாய். என்ன நீ பெரிய கொம்பனா. உன்னை கைது பண்ண முடியாதா. ஒரு கட்சியை எப்படி நடத்துவது, தொண்டர்களை எப்படி தயார் செய்வது என்று இனிமேலாவது விஜய் பாடம் படிக்க வேண்டும். பார்க்கின்ற கூட்டமாக இல்லாமல் கேட்கிற கூட்டமாக மாற்ற வேண்டும். கேட்கிற கூட்டமாக இருந்தால் இந்த விபத்து நடந்திருக்காது, விபரீதம் நடக்காது.
எனக்காக மக்கள் காத்திருக்க வேண்டும் என்பது அகம்பாவம். தமிழ்நாட்டு மக்கள் என்ன உனக்கு அடிமையா? உனக்காக காத்திருப்பதற்கு. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பாஜ வலை விரித்து விட்டது, விஜய் மாட்டிக்கிட்டார். இவ்வாறு அவர் பேசினார்.