தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சரியில்லை என சமீபகாலமாக எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன. மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சிறப்பாகவே இருப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழக காவல்துறையை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல கடந்த 2 நாட்கள் நடந்த சம்பவங்களை உதாரணமாக கூறலாம். சென்னையில் நகை வழிப்பறி சம்பவங்கள் தொடர்ந்து வந்த நிலையில், இதுதொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் அருண், போலீசாருடன் ஆலோசனை நடத்தினார். அப்போது தொடர் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபடுவது உள்ளூரை சேர்ந்தவர்களாக இருக்க முடியாது. கண்டிப்பாக வெளிமாநில கொள்ளையர்கள்தான் இதில் ஈடுபட்டிருக்க முடியுமென கணித்தார். நேற்று முன்தினம் சென்னையில் 6 வெவ்வேறு இடங்களில் நகை பறிப்பு சம்பவங்கள் நடந்தன. நகர் முழுவதும் வாகன சோதனையை தீவிரப்படுத்தினார். சிசிடிவி ஆய்வுகள், கொள்ளையர் பயன்படுத்திய பைக் நம்பர் மற்றும் அவர்களது நடை, உடை, பாவனைகளை கண்காணித்ததோடு, போக்குவரத்து தொடர்பாகவும் தீவிரமாக கண்காணித்தனர்.
பஸ், ரயில், விமானம் வரை விசாரணை நீண்டது. இறுதியாக, சென்னை விமான நிலையத்தில் மும்பைக்கு செல்ல டிக்கெட் எடுத்தவர், விமானத்தில் ஐதராபாத் செல்ல முயன்ற 2 பேரை மடக்கி பிடித்தனர். இவர்கள் அளித்த தகவலின்படி 3வது குற்றவாளி ரயிலில் தப்பியபோது கைதானார். இவர்கள் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த கொள்ளையர்களான ஜாபர் குலாம் உசேன் இரானி, மார்சிங் அம்ஜத் இரானி), சல்மான் என தெரிந்தது. வழிப்பறியில் பயன்படுத்திய பைக்கை பறிமுதல் செய்ய அழைத்துச் சென்றபோது, தப்பிக்க முயன்ற ஜாபர் குலாம் உசேன் போலீசார் நடத்திய என்கவுன்டரில் உயிரிழந்தார். ஒரு சம்பவம் நடந்த சில மணிநேரத்தில், தடயம் பெரிய அளவில் கிடைக்காத சூழலிலும், வெளிமாநில குற்றவாளிகளை விமான நிலையம் வரை சென்று மடக்கிய தமிழக போலீசாருக்கு பாராட்டுகள் குவிகின்றன. அதிலும், மகாராஷ்டிரா மற்றும் பாஜ ஆட்சி செய்யும் தலைநகர் டெல்லியிலும் கைவரிசை காட்டிய ஒரு மிகப்பெரிய கொள்ளையனை, தமிழக போலீசார் சரியான திட்டமிடலோடு பிடித்த விதம் பாராட்டிற்குரியது. சட்டம், ஒழுங்கை குறை சொல்லும் எதிர்க்கட்சிகள் ஏன் தமிழக காவல்துறையின் இந்த நடவடிக்கையை பாராட்டவில்லை? இது சட்டம், ஒழுங்கு தடுப்பு நடவடிக்கையில் சேராதா என்ன? தமிழகத்தில் சமீப காலங்களாக கொலை சம்பவங்கள் அதிகரிப்பதாகவும் கூறி வருகின்றனர்.
இந்த சம்பவங்கள் பெரும்பாலானவை தனிநபர் விரோதம், கள்ளக்காதல் விவகாரம் மற்றும் பழிக்குப்பழி சம்பவங்களாகவே உள்ளன. காரைக்குடி வாலிபர் கொலை உட்பட பல சம்பவங்களில், பலர் முதல் குற்றவாளிகளாகவே உள்ளனர். ஒரு குற்றச்சம்பவம் நடந்த 24 மணிநேரத்திற்குள், முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்படுகின்றனர். இது காவல்துறையின் வேக நடவடிக்கை இல்லையா...? தமிழகத்தை பொறுத்தவரை தொழில் முதலீடுகள் அதிகரிப்பு, வரி பகிர்வில் முன்னேற்றம், கல்வித்துறையில் அபார வளர்ச்சி, மக்களுக்கான வளர்ச்சித்திட்டங்கள், சுகாதாரத்துறையில் முதலிடம் என மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக திகழ்கிறது தமிழக அரசு. மேற்கண்ட திட்டங்களை குறை கூற முடியாதவர்கள் தான், சரியான திசையில் பயணிக்கும் தமிழகத்தை சட்டம், ஒழுங்கு சரியில்லையென வேண்டுமென்றே குறை கூறி வருகிறார்கள். நடப்பது மக்களுக்கான ஆட்சி... நடவடிக்கையே சாட்சி என இவற்றுக்கெல்லாம் மறைமுக பதிலடி தருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.