கடந்த ஓராண்டில் எடுத்த அதிரடி வேட்டையில் வடக்கு மண்டலத்தில் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்ட 14,922 பேர் கைது
* விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் அதிகளவாக 3,171 வழக்குகள் பதிவு, சாராய வியாபாரிகளின் 5,870 வங்கி கணக்குகள் முடக்கி ஐஜி அஸ்ரா கர்க் நடவடிக்கை
சென்னை: தமிழக காவல்துறையில் கள்ளச்சாராயத்திற்கு எதிராக கடந்த ஓராண்டில் வடக்கு மண்டலத்தில் எடுத்த அதிரடி வேட்டையில் கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் காச்சியதாக 14,922 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், சாராய வியாபாரிகளின் 5,870 வங்கி கணக்குகளை முடக்கி வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கர்க் நடவடிக்கை எடுத்துள்ளார். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பெண்கள் உட்பட 67 பேர் உயிரிழந்தனர்.
200க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இனி தமிழகத்தில் ஒரு சொத்து கள்ளச்சாரம் கூட இருக்க கூடாது என்று கள்ளச்சாராயத்திற்கு எதிராக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவுப்படி தமிழ்நாடு முழுகூதும் காவல் துறை மண்டல வாரியாக கள்ளச்சாராயத்திற்கு எதிராக அதிரடி வேட்டை நடத்தி வருகின்றனர்.
அதில் குறிப்பாக, வடக்கு மண்டலத்தில் ஐஜி அஸ்ரா கர்க் நேரடி மேற்பார்வையில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய 10 மாவட்டங்களில் மாவட்ட எஸ்பிக்கள் தலைமையில் கள்ளச்சாராயத்திற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி வடக்கு மண்டலத்தில் உள்ள 10 மாவட்டங்களில் கடந்த 1.7.2024 மற்றும் 31.7.205ம் ேததி வரையிலான ஓராண்டு காலத்தில் தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் 1937ன் படி கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் காய்ச்சியதாக 14,900 வழக்குகள் தனித்தனியாக பதிவு செய்து கள்ளச்சாராய வியாபாரிகள் உட்பட மொத்தம் 14,922 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களில் தொடர்ந்து குற்றங்களில் ஈடுபட்டு வந்த 7,481 பேரை தமிழ்நாடு மதுவிலக்கு (திருத்தம்) சட்டம் 2024ன்படி பிணையில் விடக்கூடாத குற்றங்களில் 7,481 பேரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்த அதிரடி வேட்டையில் 20,011 லிட்டர் கள்ளச்சாராயம், 67 ஆயிரத்து 778 லிட்டர் ஊறல், 256 லிட்டர் எரிசாராயம் மற்றும் கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்காக எடுத்து செல்லப்பட்ட சுமார் 1 லட்சம் கிலோ வெல்லம் உள்ளிட்ட மூலப்பெருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கள்ளச்சாராயத்திற்கு எதிராக ஐஜி அஸ்ராக் கர்க், கடந்த ஓராண்டில் மட்டும் எடுத்த நடவடிக்கையால் வடக்கு மண்டலத்தில் உள்ள 10 மாவட்டங்களில் தொடர் கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் காய்ச்சும் பணியில் ஈடுபட்ட கள்ளச்சாராய வியாபாரிகளின் 5,870 வங்கி கணக்குகள் முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளார்.
அதேபோல் கடந்த ஓராண்டில் 10 மாவட்டங்களில் குறிப்பாக கல்வராயன் மற்றும் ஜவ்வாது மலை பகுதிகளில் தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்த 123 கள்ளச்சாரா வியாபாரிகளை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்துள்ளார். அதேபோல், வடக்கு மண்டலத்தில் கள்ளச்சாராய விற்பனையில் இருந்து மீண்டு வேறு தொழில் செய்ய முன்வந்த 2170 பேர் மீது 52ஏஏ சட்டப்படியும், பிஎன்எஸ்எஸ் 129வது சட்டப்பிரிவின் கீழ் 1651 நபர்களிடம் நன்னடத்தைக்கான பிணை பத்திரம் பெற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு மண்டலத்தில் கள்ளச்சாராயம் விற்பனையில் முதல்டத்தில் விழுப்புரம் மாவட்டமும், கடைசி இடத்தில் காஞ்சிபுரம் மாவட்டமும் இடம் பெற்றுள்ளது. இதேபோல் மதுவிலக்கு சட்டத்தின் கீழ் காஞ்சிபுரம், விழுப்புரம், வேலூர் சரகங்களில் உள்ள டிஐஜிக்கள் மேற்பார்வையின் கீழ் வடக்கு மண்டலத்தில் உள்ள 10 மாவட்டங்களில் கள்ளச்சாராயத்திற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.