Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இணைப்புக்கான நடவடிக்கை தொடரும்; விளக்கம் கேட்காமல் பதவியை நீக்கியதற்கு காலம் பதில் சொல்லும்: செங்கோட்டையன் பதிலடி

கோபி: விளக்கம் கேட்காமல் பதவி நீக்கியதற்கு காலம் பதில் சொல்லும் என்று முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி அளித்துள்ளார். கட்சியில் இருந்து பிரிந்தவர்களை இணைக்க 10 நாள் கெடு விதித்து பேட்டியளித்த அதிமுக மூத்த தலைவரும், முன்னாள அமைச்சருமான கே.ஏ. செங்கோட்டையன் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சி பொறுப்புகளில் இருந்து விடுவித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். கட்சி பொறுப்புகளை பறித்த தகவல் அறிந்து செங்கோட்டையன் வீட்டிற்கு நேற்று ஏராளமான கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் வந்தனர். அதே போன்று, அதிமுக உரிமை மீட்பு குழுவை சேர்ந்த ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டோரும் அவரது இல்லத்திற்கு வந்தனர். இதனையடுத்து செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது: நேற்று எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் அதிமுக மாபெரும் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில்,

தொண்டர்களின் உணர்வுகள், மக்கள் எதிர்பார்ப்புகளை பிரதிபலிக்கும் வகையில், எனது விளக்கத்தை வெளிப்படையாக தெரிவித்தேன். அதற்கு இன்று (நேற்று) கழகத்தின் பொறுப்பில் இருந்து விடுவித்து இருக்கிறார்கள். பொதுவாக, ஜனநாயகம் என்பது ஒரு கட்சியில் நடவடிக்கை எடுக்கும் முன் விளக்கம் கேட்டிருக்க வேண்டும். அந்த விளக்கம் கேட்காமல் கட்சியிலிருந்து விடுவித்து இருக்கிறார்கள். ஜனநாயகத்தை காக்கிறோம், சுயமரியாதையோடு யார் வேண்டுமானாலும் எந்த கருத்துகளையும் சொல்வதற்கு அதிமுகவில் தடையில்லை என பல மேடைகளில் பேசுகிறார்கள். ஆனால், கருத்து சொன்னதற்காக நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். இதற்கெல்லாம் காலம் தான் பதில் சொல்லும். எனது பணி நேற்று கூறியதை நோக்கித்தான் தொடரும். அதிமுகவில் சிலர் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி இருக்கிறார்கள். இதெல்லாம் போகப்போக காலத்தினால் தெரியும்.

6 பேர் கொண்ட குழு சந்தித்தது கருத்துக்களை பரிமாறியது உண்மை. பொதுச்செயலாளரிடத்தில் எட்டு மாதத்திற்கு முன்பாகவே இந்த கருத்தை தெளிவுபடுத்தி இருக்கின்றேன். கட்சி பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுவேன் என்று எதிர்பார்க்கவில்லை. இது எனக்கு வேதனையில்லை. மகிழ்ச்சி. இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்று இப்போது சொல்வதற்கு இல்லை. இணைப்பு பற்றி சொல்ல பொதுக்குழு எப்போது கூடியது? பொதுக்குழுவை கூட்டினால் மட்டுமே அதில் பேச முடியும். பத்து நாட்களில் ஒருங்கிணைப்பு பணியை துவங்க வேண்டும் என சொல்லி இருக்கின்றேன். அதற்குப்பின் ஒரு மாதம் ஆனாலும் பரவாயில்லை பேசி தீர்க்க வேண்டும் என்றும் சொல்லி இருக்கிறேன். செம்மலை அவர்களுடன் இருக்கிறார். அதனால், அவர் எதிராக சொல்ல மாட்டார். அவர் தர்ம யுத்தத்திற்கு சென்று வந்த பிறகு இவருடன் ஒட்டிக்கொண்டார்.

அந்த கருத்தை சொல்வதில் மாறுபட்ட கருத்து இல்லை. இந்த கருத்தை யார் தான் வெளிப்படுத்துவது என்பதுதான் என் கேள்வி.? தொண்டர்கள் எல்லோரும் நினைக்கிறார்கள் அதிமுக வெற்றி பெற வேண்டும். அவர்கள் வேண்டுகோள் வைக்கிறார்கள். காலில் கூட விழுந்து இயக்கத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள் என காஞ்சிபுரத்தில் பேசியிருக்கிறார்கள். அதற்கு எந்த நடவடிக்கையும் இல்லை என்ற போது, ஒரு விளக்கத்தை என் போன்ற எம்ஜிஆரால் இயக்கம் துவங்கிய நாள் முதல் கட்சிக்காக உழைப்பவர்கள் கருத்தை வெளிப்படுத்துவது இயக்கத்திற்கு நல்லது என்ற முறையில் தான் கருத்தை வெளியிட்டேன். என்னை நீக்கியதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும். தொண்டர்களின் கருத்தை எடப்பாடி பழனிசாமி புறக்கணிக்கிறாரா? என்பதை அவர் தான் சொல்ல வேண்டும். எனது கருத்தை நான் வெளிப்படுத்தி இருக்கிறேன்.

என கருத்தை டிடிவி தினகரன், சசிகலா மட்டும் வரவேற்கவில்லை. நயினார் நாகேந்திரன், பிரேமலதா, எச்.ராஜா உள்ளிட்ட பலர் கருத்துக்களை சொல்லி இருக்கிறார்கள். தொலைக்காட்சி விவாதங்களிலும் வரவேற்று இருக்கிறார்கள். நியாயமான கருத்தை தான் நான் சொல்லி இருக்கிறேன் என்று கூறி இருக்கின்றனர். கட்சியின் நலனுக்காக தான் சொல்லி இருக்கின்றேன் என்னுடைய நலனுக்காக நான் எதையும் பேசவில்லை. இதற்கெல்லாம் காலம் தான் பதில் சொல்ல வேண்டும். கொஞ்சம் பொறுத்திருங்கள். இவ்வாறு அவர் கூறினார்.

எடப்பாடி நடவடிக்கையில் வருத்தம் இல்லை; செங்கோட்டையன் பின்னால் நிற்போம்: நீக்கப்பட்ட நிர்வாகிகள் உறுதி

நீக்கப்பட்ட நம்பியூர் அதிமுக ஒன்றிய செயலாளர் தம்பி (எ) கே.ஏ.சுப்பிரமணியம் கூறுகையில், ‘எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சி மலர வேண்டும் என்பதற்காக செங்கோட்டையன் முன்மொழிந்ததை நாங்களும் வழிமொழிகிறோம். தொண்டர்களின் கருத்தையும் தமிழக மக்களின் கருத்தையும் அவர் வெளிப்படுத்தி இருக்கிறார். 2026ல் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதற்காக செங்கோட்டையனை பின்பற்றி நாங்கள் செல்வோம். செங்கோட்டையன் எடுக்கும் அனைத்து முடிவுகளுக்கும் நாங்கள் பின் நிற்போம் என மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். பொறுப்புகள் இல்லை என்றாலும் கட்சியில் தொடர்ந்து நாங்கள் பணியாற்றுவோம். கட்சி தலைமை எடுத்த முடிவுக்காக நாங்கள் வருத்தப்படவில்லை’ என்றார்.

மாஜி நிர்வாகி குறிஞ்சிநாதன் கூறுகையில், ‘செங்கோட்டையன் தனது கருத்தை சொன்னதற்காக பதவியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார். எங்களையும் நீக்கி இருக்கிறார்கள். செங்கோட்டையன் எவ்வழியோ நாங்களும் அவ்வழியில் தான் செல்வோம். இங்குள்ள அனைத்து நிர்வாகிகளும் செங்கோட்டையன் பின்னால் தான் நாங்கள் நிற்கின்றோம். அவருக்கு பின்னால் எப்போதும் துணை நிற்போம்’ என்றார்.