Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

திருச்செங்கோடு நகராட்சி பகுதியில் 2 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்க நடவடிக்கை

*நகர்மன்ற தலைவர் அறிவுறுத்தல்

திருச்செங்கோடு : திருச்செங்கோடு நகராட்சி பகுதியில் குடிநீர் சப்ளையை சீர்செய்து, 2 நாட்களுக்கு ஒருமுறை வழங்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென நகர்மன்ற தலைவர் அறிவுறுத்தினார்.

திருச்செங்கோடு நகராட்சியில், தற்போது சுமார் 20 ஆயிரம் குடிநீர் இணைப்புகள் உள்ளன. இந்த இணைப்புகளுக்கு ஆவத்திப்பாளையம் பகுதியில் இருந்தும், பூலாம்பட்டியில் இருந்தும் 2 நாட்களுக்கு ஒருமுறை காவிரி குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.

இந்நிலையில், கடந்த 3 மாதங்களாக முறையான குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என பொதுமக்களிடமிருந்து புகார் எழுந்தது.இதுகுறித்து ஆய்வு செய்வதற்காக, திருச்செங்கோடு நகர்மன்ற கூட்டரங்கில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு தலைமை வகித்தார். நகராட்சி கமிஷனர் வாசுதேவன், நகராட்சி பொறியாளர் சரவணன் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில், நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு பேசுகையில், குடிநீர் விநியோகம் குறித்து புகார் எழுந்துள்ளது குறித்து கேள்வி எழுப்பினார்.

அதற்கு குடிநீர் இணைப்பு வழங்கும் பணியாளர்கள் பதிலளிக்கையில், சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருவதாலும், ஆங்காங்கே பொக்லைன் கொண்டு தோண்டும் போது, குடிநீர் குழாய்கள் மற்றும் இணைப்புகள் சேதமடைகின்றன.

இதனை அவ்வப்போது சரி செய்து வருகிறோம். மேலும், ஆவத்திப்பாளையம் பகுதியிலிருந்து, திருச்செங்கோட்டிற்கு குடிநீர் கொண்டு வரும் குழாய்களில், அடிக்கடி உடைப்பு ஏற்படுவதால் சவாலாக உள்ளது என்றனர்.

தொடர்ந்து நகர்மன்ற தலைவர் பேசுகையில், ‘போர்க்கால நடவடிக்கை எடுத்து மீண்டும் 2 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் சப்ளை செய்வதற்கு அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். மேலும், திருச்செங்கோடு நகராட்சியில் 38 ஆயிரம் குடிநீர் இணைப்புகள் கொடுப்பதற்கு தேவையான வசதிகள் இருந்தும், 20 ஆயிரம் இணைப்புகள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது.

இதனை பொதுமக்களிடம் எடுத்துக்கூறி, 4 வீடுகளுக்கு ஒரு குடிநீர் இணைப்பு என இருக்கும் பட்சத்தில், அதனை தனித்தனி இணைப்புகளாக பெற்றுக்கொள்ள அறிவுறுத்த வேண்டும். கூட்டப்பள்ளி மக்களுக்கு சீராக குடிநீர் கிடைக்கும் வகையில், பூலாம்பட்டி கூட்டுக்குடிநீர் திட்டத்தை இணைக்க வேண்டும்,’ என்றார். கூட்டத்தில் ஒப்பந்த பணியாளர்கள், ஒப்பந்ததாரர்கள், குடிநீர் விநியோகிக்கும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.