82 வயதாகியும் நடிப்பு ஆசை விடல... புற்றுநோய் பாதித்த பிரபல நடிகை ஆவேசம்: ஓய்வு வதந்தியால் பரபரப்பு பேட்டி
லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவின் புகழ்பெற்ற ‘டேஸ் ஆஃப் எவர் லைவ்ஸ்’ தொலைக்காட்சி தொடரில் மேகி ஹார்டன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் பிரபல நடிகை சுசான் ரோஜர்ஸ் (82) என்பவருக்கு, இரண்டாம் நிலை குடல்புற்றுநோய் இருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டது. இதையடுத்து, தொடரிலிருந்து தற்காலிகமாக விலகிய அவர், மருத்துவ சிகிச்சையில் கவனம் செலுத்தி வந்தார். இந்நிலையில், சிகிச்சைகள் முடிவடைந்து தற்போது அவர் பூரண குணமடைந்துள்ளதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், ‘எனது உடல்நிலையில் ஏதோ சரியில்லை எனத் தோன்றியதால் சில பரிசோதனைகளை மேற்கொண்டேன். கடந்த ஜூன் மாதம் எனக்கு புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது. அந்த செய்தி எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஆனால், சரியான நேரத்தில் நோய் கண்டறியப்பட்டதில் மகிழ்ச்சி. நான் ஓய்வு பெற்றுவிட்டதாகவோ அல்லது தொடரிலிருந்து விலகிவிட்டதாகவோ ஆன்லைனில் வதந்திகள் பரவியதால், இந்த தவறான தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே எனது உடல்நிலை குறித்த உண்மையை இப்போது வெளியிடுகிறேன்’ என்று குறிப்பிட்டார். மேலும், ஆறு வாரங்கள் தொடர் கீமோதெரபி மற்றும் கதிர்வீச்சு சிகிச்சைகளை நிறைவு செய்துள்ளேன். தற்போது நன்றாக உள்ளதால் அடுத்த வாரமே படப்பிடிப்பில் கலந்துகொள்ள திட்டமிட்டுள்ளேன்’ என்று தெரிவித்தார்.
 
  
  
  
   
