ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி துவங்கலாம். பிரசாரம் செய்யலாம். ஆனால் குறைந்தபட்ச அரசியல் அறிவை பெற்றிருக்க வேண்டும். அரசியல் அறிவை மேம்படுத்த, ஆளும் அரசின் கொள்கைகள் மற்றும் சர்வதேச உறவுகள் பற்றி படிப்பது அவசியம். ஆனால் நடிகர் விஜய், கட்சியை துவங்கியதில் இருந்து அவரது பேச்சும், செயல்பாடும் சினிமா படத்தில் நடிப்பது போன்று தான் உள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன் கட்சியை துவங்கி அவர், விக்கிரவாண்டி மற்றும் மதுரையில் 2 மாநாடுகளை நடத்தியுள்ளார். கரூரில் விஜய் பிரசாரத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோக வடுவாக தமிழர்களின் மனதில் உள்ளது. இந்நிலையில் காஞ்சிபுரத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் விஜய் பேசும்போது, அனைவருக்கும் வீடு, மோட்டார் சைக்கிள், கல்வியில் சீர்திருத்தம் போன்றவற்றை அறிவித்ததற்கு சமூக வலைதளத்தில் கடுமையான விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.
தமிழ்நாட்டில் இன்னும் 5 ஆண்டில் குடிசை இல்லா மாநிலமாக மாற்ற அரசு புதிய திட்டத்தை அறிவித்து செயல்படுத்தி வருகிறது என்பது அவருக்கு தெரியவில்லை. தமிழ்நாட்டில் 2010ம் ஆண்டு முதன் முதலில் `கலைஞர் வீடு வழங்கும் திட்டம்’ தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் முக்கிய நோக்கமே குடிசையில்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்பதுதான். ஆனால், சமீபத்தில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பு ஒன்றில் மாநிலத்தில் சுமார் 8 லட்சம் குடிசைகள் மீதம் இருப்பது தெரியவந்தது. அதன் பிறகே முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு புதிய திட்டத்தை அறிவித்தார். அதாவது, 2030ம் ஆண்டிற்குள் `குடிசைகள் இல்லா தமிழகம்’ என்ற இலக்கை அடையும் பொருட்டு, 19 பிப்ரவரி 2024 அன்று தமிழக சட்டப்பேரவையில் 2024-25ம் நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கலின்போது நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பை வெளியிட்டார்.
அதுமட்டுமல்லாமல், 2025ம் ஆண்டிற்குள் தமிழகம் முழுவதும் 1 லட்சம் வீடுகள் கட்டவும் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக ரூ.3,100 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் தமிழகத்தில் குடிசை வீடுகளிலும், ஓட்டு வீடுகளிலும் வசிக்கும் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் மானியத்தில் ஆர்சிசி கூரையுடன் கூடிய புதிதாக கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படுகிறது. அத்துடன் இத்திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு சொந்தமாக வீட்டு மனை இல்லையென்றாலும், அரசாங்கமே வீட்டு மனையை இலவசமாக வழங்குகிறது. மேலும் வீட்டுக்கு தேவையான கட்டுமான பொருட்கள் வழங்கப்படுவதோடு, கட்டுமான பணிகளும் செய்து கொடுக்கப்படுகிறது. அதே சமயம், பயனாளர்கள் தங்களது வீடுகளில் கூடுதல் வசதிகள் செய்ய விரும்பினாலும், அதற்கு ரூ.1.50 லட்சம் வரை கடனும் வங்கிகள் மூலமாக வழங்கப்படுகிறது.
அடுத்ததாக அனைவருக்கும் வேலைவாய்ப்பு உருவாக்குவது என்பது முதலீடுகள், புதிய தொழில்கள் மற்றும் திறன் மேம்பாட்டு திட்டங்கள் மூலம் மட்டுமே சாத்தியமாகும். இதை தான் திமுக அரசு செய்து வருகிறது. அடுத்ததாக கல்வியில் சீர்திருத்தம் என்று அவர் பேசியது, ஒன்றிய அரசு தான் கல்வியில் சீர்திருத்தத்தை கொண்டு வர முடியும் என்பது அவருக்கு தெரியவில்லை. ஆட்சி அதிகாரத்தை பிடிப்பதற்காக அவர், நம்ப முடியாத வாக்குறுதிகளை எல்லாம் அறிவிக்கிறார். அதற்கான நிதியை எவ்வாறு தேடுவது என்பதையும் அவர் தெரிவிக்க வேண்டும். படத்தில் நடிப்புக்கும், அரசியலுக்கும் பெரிய வேறுபாடு உள்ளது என்பது வரும் சட்டமன்ற தேர்தலில் அவருக்கு தெரிந்துவிடும்.



