Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மாவட்டம் முழுவதும் 5000 ஏக்கரில் சாகுபடி தஞ்சாவூரில் எள் அறுவடை பணி விறுவிறுப்பு

*விலையும் குறையாததால் விவசாயிகள் மகிழ்ச்சி

தஞ்சாவூர் : தஞ்சாவூர் அடுத்த திருக்கானூர்பட்டி பகுதியில் எள் செடிகள் அறுவடை பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.திருக்கானூர்பட்டி பகுதியில் பயிரிடப்பட்ட எள் அறுவடை பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ள மானாவாரி விவசாயிகள். தஞ்சாவூரை அடுத்து திருக்கானூர்பட்டி, சாமிப்பட்டி, சூரக்கோட்டை, ஒரத்தநாடு, வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செடிகள் பயிரிடப்பட்டுள்ளது. காவிரி டெல்டா பகுதியில் முப்போகம் நெல் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.

மேலும் கோடை சாகுபடி செய்வதும் வழக்கம். இதேபோல் உளுந்து, பயறு, எள் போன்றவையும் கோடை சாகுபடியாக செய்யப்பட்டு வருகிறது. எள் எல்லாவித மண்ணிலும் விளைச்சல் தரவல்லது. தமிழ்நாட்டில் அதிகப் பரப்பளவில் எள் சாகுபடி செய்ய முடியும். எள் பேக்கரி பொருட்கள் தயாரிப்பில் வாசனை மற்றும் அழகுப் பொருளாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு ஏக்கருக்கு எள் விதையை மணலுடன் கலந்து சீராக தூவி விதைத்தால் ஒரு கிலோ விதை போதுமானதாக இருக்கும்.

எள் எண்ணெய், கால்நடைக்கு புண்ணாக்கு, நிலத்துக்கு உரம்னு பலவகையில பயன்படுத்தப்படுகிறது. வேலையாள் பற்றாக்குறை, தண்ணீர் பற்றாக்குறை என பல விஷயங்களைச் சமாளிக்க முடியாமல் திண்டாடுவோர்களுக்கு அருமையானத் தீர்வு இந்த எள் தான். எள் விதைக்க வடிகால் வசதியோடு இருக்கும் எல்லா மண் வகைகளும் ஏற்றது. எள்ளின் வயது 90 நாள். பெரும்பாலும் ஒரு போகம் நெல் விவசாயம் முடிந்ததும், அடுத்து ஒரு போகம் இறவையில் எள் விதைக்கலாம். தஞ்சையை அடுத்து திருக்கானூர் பட்டியில் சுமார் ஒரு ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட எள்ளை அறுவடை செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து விவசாயி ஒருவர் கூறுகையில்: எள்ளுக்கு பல பட்டம் இருந்தாலும், மாசிப் பட்டத்தில் விதைப்பது சிறந்தது. நிலத்தில் இரண்டு உழவு போட்டு தண்ணீர் கட்டி, புட்டு பதத்துக்கு மண்ணை மாற்றிவிட்டு, விதையைத் தூவி, மறுபடியும் இரண்டு உழவு போடவேண்டும். இதுபோல விதைக்கும்போது 60% அளவுக்கு களைகள் கட்டுப்படும். எள்ளில் ஏகப்பட்ட ரகங்கள் இருக்கின்றன. நாட்டுரகமான கருப்பு எள்தான் சிறந்த ரகம். மானாவாரி என்றால், ஏக்கருக்கு இரண்டு கிலோ விதை தேவைப்படும். இறவை என்றால் ஒரு ஏக்கருக்கு மூணு கிலோ விதை தேவைப்படும். இதனால்தான் விவசாயிகள் எள் பயிரிடுவதில் ஆர்வம் காட்டுகின்றனர். தற்போது இந்த பகுதியில் எள் அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது.

அறுவடை செய்யப்பட்ட எள்களை சாலையில் காய வைத்து வருகிறோம். காய வைத்த எள் செடிகளில் தனியாக பிரித்து சுத்தப்படுத்தி மார்க்கெட்டுக்கு கொண்டு சென்று வியாபாரிகளிடம் விற்பனை செய்வோம். தற்போது ஒரு கிலோ எள் ரூ.130 முதல் 150 வரை விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு ஒரு மூட்டை எள் ரூ.10 ஆயிரத்துக்கு மேல் விற்பனை செய்யப்பட்டது. இந்த ஆண்டும் அதேபோல் விற்பனை ஆகும் என விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர் என்றார்.