சாதனை மாணவி பிரேமாவுக்கு ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் புதிய வீடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை: சாதனை மாணவி பிரேமாவுக்கு ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் புதிய வீடு கட்டிக் கொடுக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று முன்தினம் நடைபெற்ற ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ விழாவில் நான் முதல்வன் திட்டம் மூலம் பயன்பெற்ற மாணவர்கள் தங்கள் சாதனைகளை பற்றி பேசினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் நான் முதல்வன் திட்டத்தில் உதவி பெற்ற தென்காசி மாணவி பிரேமா, தனது முதல் மாத சம்பளத்தை மேடையில் தன் அப்பாவிடம் கொடுத்தார். இதை பார்த்து எல்லோரும் கண்கலங்கினர். அவர் பேசும்போது, ‘‘பெண் பிள்ளையை எதுக்கு படிக்க வைக்கிறீங்கன்னு ஊர் மக்கள் கேட்டாங்க. ஆனால் என் அப்பா பல தடைகளை தாண்டி என்னை படிக்க வைத்தார்.
ஒழுகும் வீட்டில் எனது அப்பா இருந்து, கஷ்டப்பட்டு என்னை படிக்க வைத்தார்” என்று உணர்ச்சி பொங்க பேசினார். இந்த நிலையில், ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ விழாவில் ‘நான் முதல்வன்’ திட்ட பயனாளி பிரேமாவின் கனவை நனவாக்கிடும் வகையில் ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் புதிய வீடு கட்ட ஆணை வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு:
ஒழுகும் வீட்டில் அப்பா இருப்பாரே என்ற கவலை பிரேமாவுக்கு இனி வேண்டாம். எத்தனையோ பேரின் எதிர்ப்பையும் மீறி உங்களை படிக்க வைத்த தந்தையிடம், முதல் மாத சம்பளத்தை தந்து நீங்கள் மகிழ்ச்சி அடைந்தீர்கள். உங்கள் கனவை நிறைவேற்றிய தந்தைக்கு ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் புதிய வீடு கட்டிக் கொடுப்பதற்கான ஆணையை வழங்கி நான் மகிழ்ச்சி கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் இந்த செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். அதுவும் மாணவி பேசிய 24 மணி நேரத்தில் அவருக்கு வீடு கட்டிக் கொடுக்கப்படும் என்று அறிவித்துள்ள முதல்வரை பாராட்டியுள்ளனர்.