சாதனை கோல் போட்டு அசத்தியவர் ஹாக்கியில் தீபிகாவுக்கு மேஜிக் ஸ்கில் விருது: இந்திய வீராங்கனைக்கு கவுரவம்
புதுடெல்லி: ஒடிசாவின் புவனேஸ்வர் நகரில் நடந்த, எப்ஐஎச் புரோ 2024-25 ஹாக்கி போட்டிகளின்போது, நெதர்லாந்து அணியுடன் இந்திய மகளிர் அணி மோதியது. அப்போது இந்தியாவின் முன்கள வீராங்கனை தீபிகா, பந்தை கோல் போஸ்ட் வரை லாவகமாக கடத்திச் சென்றார். அங்கே கோல் போட முடியாத வகையில் நெதர்லாந்து வீராங்கனைகள் பலர் தடுப்பாட்டம் ஆடிக் கொண்டிருந்தபோது யாரும் எதிர்பாராத வகையில் நேர்த்தியாக பந்தை மட்டையால் சற்று மேலே தூக்கி கோல் போஸ்டுக்குள் தள்ளி கோலாக்கினார்.
பல முன்னணி வீராங்கனைகளால் முடியாத வகையில், மேஜிக் செய்தாற் போல, அந்த கோல் அமைந்தது. வியப்பூட்டும் வகையில் தீபிகா அடித்த கோலை கவுரவிக்கும் வகையில், அவருக்கு உலகளவில் கவுரவம் மிக்கதாக கருதப்படும், மேஜிக் ஸ்கில் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதை பெறும் முதல் இந்திய வீராங்கனை தீபிகா என்பது குறிப்பிடத்தக்கது.