அரசின் சாதனைகளை விளம்பரப்படுத்த அறிவுரை கலைஞர் உரிமைத்தொகை பெற தகுதியானவர்களுக்கு உதவ வேண்டும்: ‘உடன்பிறப்பே வா’ நிகழ்ச்சியில் கட்சியினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
சென்னை: ‘உடன்பிறப்போ வா’ நிகழ்ச்சியில் தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய முதல்வர், தகுதியானவர்கள் இருப்பின் கலைஞர் உரிமை தொகை பெற கட்சியினர் உதவிட வேண்டும் என்றும், அரசின் சாதனைகளை தொகுதி முழுவதும் விளம்பரப்படுத்தவும் அறிவுறுத்தினார். தமிழ்நாட்டில் 2026ம் ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
இதையொட்டி திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் ‘உடன்பிறப்பே வா’ என்ற தலைப்பில் தொகுதிவாரியாக முக்கிய திமுக நிர்வாகிகளை சென்னைக்கு அழைத்து வந்து, அவர்களிடம் தனித்தனியே ஆலோசனை நடத்தி வருகிறார். அந்த நிகழ்வின் போது, ஒவ்வொரு சட்டமன்றம் வாரியாக பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோரை அழைத்து முதல்வர் குறைகளையும், தொகுதி நிலவரத்தையும் கேட்டு வருகிறார்.
அந்த வகையில், நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் ‘உடன்பிறப்பே வா’ நிகழ்ச்சியில் சாத்தூர், போடிநாயக்கனூர் ஆகிய 2 சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகளுடன் ஒன் டூ ஒன் சந்திப்பு நடத்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். ஆலோசனையின் போது தொகுதி நிலவரம், வெற்றி வாய்ப்பு, தேர்தல் பணி உள்ளிட்டவை குறித்து அவர்களிடம் கேட்டறிந்தார்.
மேலும், கலைஞர் உரிமைத் தொகை பெறாதவர்களில் தகுதியானவர்கள் இருப்பின் அவர்கள் உரிமைத் தொகை பெறும் வகையில் கட்சியினர் உதவ வேண்டும் என்றும் அவர்களிடம் முதல்வர் அறிவுரை வழங்கினார். அரசின் சாதனைகள் தொகுதி முழுவதும் மக்களை சென்றடையும் வகையில் விளம்பரப்படுத்த வேண்டும் என்றும் அவர்களுக்கு உத்தரவிட்டார்.
அதேபோன்று, போடி தொகுதியை இம்முறை திமுக கூட்டணி வெல்ல வேண்டும் என்றும் அந்த தொகதி நிர்வாகிகளிடம் முதல்வர் கண்டிப்புடன் கூறினாார். நேற்று வரை மொத்தமாக 38 நாட்களில் 81 சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
