Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

16 குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க காலஅவகாசம் நீடிப்பு: அன்புமணிக்கு 10ம் தேதி வரை கெடு

  • விளக்கமளிக்கவில்லை என்றால் கட்சி விரோத நடவடிக்கை
  • பாமக நிர்வாக குழு கூட்டத்துக்கு பின் ராமதாஸ் பேட்டி

திண்டிவனம்: பாமக மாநில நிர்வாக குழு நேற்று தைலாபுரத்தில் கூடி ஆலோசனை நடத்திய நிலையில், 16 குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க அன்புமணிக்கு 10ம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் இல்லையென்றால் கட்சி விரோத நடவடிக்கை எடுக்கப்படும் என ராமதாஸ் தெரிவித்து உள்ளார்.

பாமகவில் நிறுவனர் ராமதாசுக்கும், மகன் அன்புமணிக்கும் இடையோன அதிகார மோதல் 8 மாதமாக நீடித்து வரும் நிலையில், கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் அன்புமணியை கட்சியிலிருந்து நீக்குவது, தேர்தல் பணியை துரிதப்படுத்துவது சம்பந்தமாக நேற்று முன்தினம் தைலாபுரம் தோட்டத்தில் பாமக மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள், வன்னியர் சங்க செயலாளர்கள், தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் அன்புமணி மீது நடவடிக்கை எடுப்பது குறித்து பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு பரிந்துரைக்கு மாவட்ட நிர்வாகிகள் தங்கள் முழு ஆதரவை தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து கட்சியின் முக்கிய முடிவுகளை எடுக்கும் உயர்மட்ட அமைப்பான மாநில நிர்வாக குழு கூட்டம் தைலாபுரத்தில் நேற்று கூடியது. ராமதாஸ் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் கவுரவ தலைவர் ஜி.கே.மணி, பொதுச்செயலாளர் முரளிசங்கர், பொருளார் சையது மன்சூர் உசேன், ராமதாசின் மூத்த மகள் ஸ்ரீகாந்தி, வன்னியர் சங்க தலைவர் பு.தா.அருள்மொழி, தலைமை நிலைய செயலாளர் அன்பழகன், சமூக முன்னேற்ற சங்கம் பரந்தாமன், மகளிர் அணி சுஜாதா கருணாகரன், திருக்கச்சூர் ஆறுமுகம் உள்பட 20 பேர் கலந்து கொண்டனர். இதில் மாஜி மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, வைத்திலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்கவில்லை.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பெரும்பாலான நிர்வாகிகள், ‘கட்சி நிறுவன தலைவரை மீறி செயல்பட்டு வரும் அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினர். 2026 தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் கட்சியில் நீடித்து வரும் குழப்பங்களுக்கு ராமதாஸ் ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

அன்புமணி மீது நடவடிக்கை எடுப்பதில் காலதாமதம் செய்தால் அது கட்சிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்’ என கூறியதாக தெரிகிறது. இதற்கு பதிலளித்த ராமதாஸ், ‘கட்சி பிளவு பட்டுவிடக்கூடாது என்றுதான், நான் இத்தனை நாள் பொறுத்திருந்தேன். இனியும் கால தாமதம் செய்ய மாட்டேன். ஒழுங்கு நடவடிக்கை குழுவின் பரிந்துரைகளை விரைவில் அறிவிப்பேன். கட்சியின் விதிமுறைப்படி நடவடிக்கை எடுக்க வேண்டியிருப்பதால்தான் இத்தனை நாள் பொறுத்திருந்தேன். விரைவில் உங்களுக்கு நல்ல செய்தி வரும்’ என உறுதி அளித்ததாக கூறப்படுகிறது.

2 மணி நேரம் நடைபெற்ற கூட்டத்திற்குபின் ராமதாஸ் நிருபர்களிடம் கூறுகையில், ‘அன்புமணி மீதான 16 குற்றச்சாட்டுக்கள் குறித்து அனுப்பி வைக்கப்பட்ட நோட்டீசுக்கு உரிய விளக்கம் அளிக்க தவறியதால், அன்புமணி மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக பாமக ஒழுங்கு நடவடிக்கை குழுவால் பரிந்துரைக்கப்பட்ட அறிக்கை குறித்தும், அன்புமணி மீது எந்தவிதமான நடவடிக்கை எடுப்பது என்பது பற்றியும் ஆலோசிக்கப்பட்டது. இதில் நேரிலோ, எழுத்துப்பூர்வமாகவோ அன்புமணி விளக்கம் அளிக்கவில்லை என்பதால் நிர்வாக குழு கூடி ஒழுங்கு நடவடிக்கையை வேறுவிதமாக தெரிவித்திருந்தது. அதனையும் நிர்வாக குழு ஆராய்ந்து ஒருவார காலம் அவகாசம் கொடுக்கலாம் என முடிவெடுத்தது. அதன்படி 10.09.2025க்குள் அன்புமணி விளக்கம் அளிக்க மீண்டும் நோட்டீஸ் அனுப்பப்படும். அதற்கும் அவர் பதிலளிக்கவில்லை என்றால் கட்சி விரோத நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

இன்று பதில் - அன்புமணி

சேலம் மாவட்டம் மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, பாமக தலைவர் அன்புமணி சேலம் சென்றார். சேலம் விமான நிலையத்தில் அன்புமணியிடம், பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ள 16 குற்றச்சாட்டுகளுக்கு வரும் 10ம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று 2வது முறையாக உங்களுக்கு கெடு விதிக்கப்பட்டுள்ளதே என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு நாளை (இன்று) பதில் அளிப்பதாக கூறிவிட்டு, காரில் புறப்பட்டு சென்றார்.

‘எத்தனை முறைதான் இதே பாட்டு பாடுவது’

அன்புமணி 2வது முறையும் பதிலளிக்கவில்லை என்றால் என்ற கேள்விக்கு, ‘போக போகத் தெரியும்’ என்ற பாடலை பாடிய அவர், எத்தனை முறைதான் இதே பாடுவது என்று கூறினார். மேலும் ஒருவார கால அவகாசம் கொடுப்பது என்பது பேச்சு வார்த்தைக்குதான் என்று ராமதாஸ் தெரிவித்தார். இதற்கிடையில் பாமக உறுப்பினர் படிவம், அடையாள அட்டைகளில் அன்புமணியின் புகைப்படம் நீக்கம் செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.