கோவை: கோவை மாநகராட்சி 80, 81, 83வது வார்டு இளநிலை பொறியாளராக இருந்தவர் விமல்ராஜ். இவர் ஒப்பந்ததாரர்களிடம் லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார் வந்தது. வ.உ.சி. பூங்கா வளாகத்தில் உள்ள வார்டு அலுவலகத்தில் ஆய்வு செய்தபோது ரூ.1 லட்சத்து 2,100 பறிமுதல் செய்யப்பட்டது. அவர் கோவையில் இருந்து கடலூர் மாநகராட்சிக்கு மாற்றப்பட்டார். அங்கு அவர் தற்போது தொழில்நுட்ப உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். அவர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவரை தீவிரமாக கண்காணித்து விசாரணையை முடுக்கிவிட்டனர்.
கடந்த 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1ம் தேதி முதல் 2024ம் ஆண்டு ஜூலை வரையிலான காலகட்டத்தில் அவரது வருமானத்தை லஞ்ச ஒழிப்புத்துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1ம் தேதி, விமல்ராஜ், தாய், சகோதரி ஆகியோர் பெயரில் ரூ.23 லட்சத்து 75 ஆயிரத்து 846 சொத்து இருந்தது. ஆனால் இது பல மடங்கு அதிகமாகி 4 ஆண்டுகளில் அதாவது 2024 ஜூலை 31ம் தேதி அவர்கள் 3 பேரின் பெயரில் ரூ.1 கோடியே 8 லட்சத்து 96 ஆயிரத்து 712 மதிப்பில் சொத்து இருந்தது லஞ்ச ஒழிப்பு போலீசாரின் தீவிர விசாரணையில் தெரியவந்தது. இந்த காலகட்டத்தில் அவர் சட்டப்பூர்வமாக ரூ. 37 லட்சத்து 72 ஆயிரத்து 841 வருவாய் ஈட்டியுள்ளார். இதில் குடும்ப செலவுக்காக ரூ.21 லட்சத்து 31,541 செலவிட்டிருக்கிறார்.
அவர்கள் பெயரில் ரூ.16 லட்சத்து 41 ஆயிரத்து 300 சேமிப்பு இருக்கிறது. ஆனால் அவர் ரூ.68 லட்சத்து 75 ஆயிரத்து 566 மதிப்பிலான சொத்துகளை வருமானத்துக்கு அதிகமாக சேர்த்திருப்பது தெரியவந்தது. இது அவரது வருவாயைவிட 182 சதவீதம் அதிகம் ஆகும். இதனை தொடர்ந்து விமல்ராஜ் மீதும், சட்ட விரோதமாக சொத்துகளை சேர்க்க தூண்டியதாக அவரது தாய் விமலா, சகோதரி திவ்யா ஆகியோர் மீதும் கோவை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் எழிலரசி வழக்குப்பதிவு செய்துள்ளார். இதற்கான எப்ஐஆர் நகல் மாவட்ட நீதிபதிக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.