சொத்து குவிப்பு விவகாரம் வெளியானதால் பாஜ தலைவர்கள் மீது அண்ணாமலை அதிருப்தி: நிர்வாகிகள் கூட்டத்தை புறக்கணித்தார்; பி.எல்.சந்தோஷ் சமரசம்
சென்னை: தான் வாங்கிய சொத்து குறித்து தகவல்கள் வெளியாகியதால், பாஜ தலைவர்கள் மீதும், மோடி, அமித்ஷா மீதும் அண்ணாமலை கடும் கோபத்தில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் சென்னையில் நடந்த கூட்டத்தை அவர் புறக்கணித்தார். மூத்த தலைவர்கள் சமரசம் செய்ததால், பிற்பகலில் கலந்து கொண்டார். இது பாஜ வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அருகே உள்ள அக்கரையில் பாஜ மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கட்சியின் பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ், தமிழக பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர். தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் சமீபத்தில் புதிய நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டவர்கள், 21 அணிகளின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், தேர்தல் பணிகள், தேர்தல் கூட்டங்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள், பூத் கமிட்டி உறுப்பினர்களின் கூட்டம், தேசிய தலைவர்களை அழைப்பது உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டன. இந்த கூட்டம் நடைபெறுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. நெல்லையில் பூத் கமிட்டி கூட்டம் சில நாட்களுக்கு முன்னர் அமித்ஷா தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில்தான் நிர்வாகிகள் கூட்டத்தை சென்னையில் நடத்துவது, அந்த கூட்டத்துக்கு அமித்ஷாவை அழைப்பது என்று முடிவு எடுத்தனர். ஆனால் அமித்ஷா வர மறுத்து விட்டார். இதனால் பி.எல்.சந்தோசை அழைத்தனர். அவர் கலந்து கொண்டார்.
இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் தவிர்ப்பதற்காக தனக்கு காய்ச்சல் நோய் உள்ளதாக பத்திரிகையாளர்கள் மூலம் தகவல்களை கசிய விட்டுள்ளார். இதனால் கடந்த இரு நாட்களாக அவருக்கு உடல்நிலை சரியில்லை என்ற தகவல்கள் வெளியாகின. ஆனால் அண்ணாமலையைப் பற்றி நன்றாக தெரிந்தவரான பி.எல்.சந்தோஷ், நேற்று காலையில் நேராக அண்ணாமலையின் வீட்டுக்குச் சென்றார். காலையில் அவரது வீட்டில் சந்தோஷ் உணவு அருந்தினார். அப்போது, கூட்டத்திற்கு வருமாறு சந்தோஷ் அழைப்பு விடுத்துள்ளார்.
ஆனால் கடும் அதிருப்தியில் இருந்த அண்ணாமலை, தனது அதிருப்தியை கொட்டி விட்டார். தனது சொத்து குறித்தும், ஆவணங்கள் வெளியானது குறித்தும் கோபத்தில் சந்தோஷிடம் அண்ணாமலை கொந்தளித்துள்ளார். ஆவணங்கள் வெளியாவதற்கு பாஜ நிர்வாகிகளே காரணம். அவர்கள்தான் பாஜ ஆதரவாளர்களான வக்கீல் மற்றும் யூடியூபர் மூலம் வெளியிட்டு அசிங்கப்படுத்துகின்றனர். மாநில தலைமை முற்றிலும் புறக்கணிக்கிறது. அதோடு, தான் பதவி விலகி 6 மாதங்கள் ஆகிவிட்டது. இதுவரை தனக்கு கட்சியிலோ, ஆட்சியிலோ எந்த பதவியும் வழங்கப்படவில்லை.
தேசிய தலைமையும், பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோரும் என்னை புறக்கணிக்கின்றனர். நான் ஏன் கட்சிக் கூட்டத்திற்கு வரவேண்டும் என்று கூறியுள்ளார். இதைக் கேட்ட சந்தோஷ், ஒரு மாதத்திற்குள் கட்சிப் பொறுப்பு தேடி வரும். கவலைப்பட வேண்டாம். கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தால், தேசிய தலைமை நடவடிக்கை எடுத்து விடும். இதனால் பேசாமல் கூட்டத்திற்கு வாருங்கள் என்று தெரிவித்துள்ளார். அதை தொடர்ந்து பிற்பகல் 12 மணிக்குப் பிறகு கூட்டத்தில் அண்ணாமலை கலந்து கொண்டார்.
காலையில் தொடங்கிய கூட்டத்திற்கு வராமல், தாமதமாக ஏதோ அவர்தான் தலைவர் போல தாமதமாக வந்தது, தமிழக பாஜ நிர்வாகிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே டெல்லியில் அமித்ஷா தலைமையில் நடந்த கூட்டத்தையும் இதேபோல சில நாட்களுக்கு முன்னர் அண்ணாமலை புறக்கணித்திருந்தார். இதுகுறித்து நிருபர்கள் கேட்டபோது, ஏற்கனவே அதிகமான திருமணங்களில் கலந்துகொள்ள ஒப்புக் கொண்டதால், டெல்லி செல்லவில்லை என்று கூறினார். தற்போதும் கூட்டத்தில் அவர் கலந்து கொள்ளாமல் இருந்தார். தற்போது சந்தோஷ் வந்து அழைத்ததால்தான் கூட்டத்திற்கு சென்றுள்ளது தற்போது பேசும் பொருளாகியுள்ளது.
* பதவி வெறி ஏன்?
அண்ணாமலை தனக்கு பதவி கிடைக்காதது குறித்து பல இடங்களில் புலம்பி வருவதால், நயினார் ஆதரவாளர்கள் குஷியாக இருந்தனர். தற்போது அண்ணாமலைக்கு பதவி கொடுக்க பி.எல்.சந்தோஷ் சம்மதம் தெரிவித்திருப்பது தெரிந்ததும், அவரது ஆதரவாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். அண்ணாமலை எத்தனை பேரின் பதவியை பறித்திருப்பார். ஏன், காங்கிரசில் எம்எல்ஏவாக இருந்த விஜயதரணியை பதவியை ராஜினாமா செய்ய வைத்து அழைத்து வந்தார். ஆனால் இன்று வரை அவருக்கு பதவி வழங்கவில்லை. தான் மாநில தலைவராக இருக்கும் வரை நடிகை குஷ்புக்கு பதவி வழங்காமல் இருந்தார். இவ்வாறு பல பேரை கூறலாம். ஆனால், இன்று தனக்கு பதவி இல்லை என்றதும் கோபம் வருகிறது. அவர் பதவி வெறி பிடித்து செயல்படுகிறார். அந்த கோபத்தில்தான், அதிமுக, பாஜ கூட்டணிக்கு எதிராக செயல்படுகிறார் என்று நயினாரின் ஆதரவாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.