சிவகங்கை: சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் மற்றும் குடும்பத்தினரை விடுதலை செய்து சிவகங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழக அமைச்சரவையில் கடந்த 2006 முதல் 2011 வரை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக கே.ஆர்.பெரியகருப்பன் இருந்தார். இவர் அமைச்சராக பணியாற்றிய காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக ரூ.1.20 கோடி சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், கடந்த 2012ம் ஆண்டு கே.ஆர்.பெரியகருப்பன், அவரது மனைவி பிரேமா, தாய் கருப்பாயி அம்மாள், மகன் கோகுலகிருஷ்ணன், மைத்துனர் செந்தில்வேல் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு சிவகங்கை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணையின் போது அமைச்சரின் தாய் கருப்பாயி அம்மாள் இறந்துவிட்டார். இந்த வழக்கில் விசாரணை முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.
இதையொட்டி அமைச்சர் உள்ளிட்ட அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜராகினர். வழக்கை விசாரித்த நீதிபதி அறிவொளி, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் உள்ளிட்ட நான்கு பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.

