திருப்பூர்: திருப்பூரில் ஒரு வழிச்சாலையில் அத்துமீறி செல்லும் வாகன ஓட்டிகளால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. திருப்பூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பழைய பேருந்து நிலையம் செல்லும் பி.என்.சாலை, மேட்டுபாளையம், மில்லர் ஸ்டாப் வழியாக புஷ்பா தியேட்டர் வரை ஒரு வழிச் சாலையாக (ஒன்வே) அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல், எதிர்த் திசையில் புஷ்பா தியேட்டர் பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் குமார் நகர், எஸ்.ஏ.பி, 60 அடி சாலை வழியாகவே பி.என்.சாலையில் வழியில் இணைய வேண்டும். ஆனால், வாகனப் போக்குவரத்து விதிகளை பெரும்பாலான தனியார் மினி லோடு வாகனங்கள், இரு சக்கர வாகனங்கள் கண்டுகொள்வதில்லை.
புதிய பேருந்து நிலையம் நோக்கி விரைந்து செல்வதற்காக, பல வாகனங்கள் மேட்டுப்பாளையம் வழியாக உள்ள ஒரு வழிச் சாலையில் அத்துமீறி எதிர் திசையில் ஓட்டிச் செல்கின்றனர். இதன் விளைவாக, குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் இச்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.வாகன ஓட்டி ஒருவர் கூறுகையில், இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் விபத்து அபாயமும் நீடிக்கிறது. இப்பிரச்னையில் காவல் துறை உடனடியாகத் தலையிட்டு கண்டிப்பான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஒரு வழி சாலையில் விதிகளை மீறும் வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தல், கூடுதலாக போக்குவரத்துக் காவலர்களை இப் பகுதியில் நிலையாக நியமித்தல் ஆங்காங்கே ஒரு வழிச்சாலை குறித்து எச்சரிக்கை போர்டுகள் வைப்பது போன்ற நடவடிக்கைகள் மூலமே இந்தப் பிரச்னையைத் தீர்க்க முடியும் என்றனர்.

