Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

விபத்தில் பலியான திமுக உறுப்பினர்களின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரண நிதி: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: சாலை விபத்தில் திமுக உறுப்பினர்கள் சரண்ராஜ், பிரகாசம் இறப்புக்கு தி.மு.க. சார்பில் ரூ.20 லட்சம் குடும்ப நிவாரண நிதியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். மதுரையில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற தி.மு.க. பொதுக்குழுக் கூட்டத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் , ‘‘கழக உறுப்பினர்கள் யாராவது எதிர்பாராத விதமாக சாலை விபத்தில் இறந்து போகும் சூழல் ஏற்பட்டால், இறந்த உறுப்பினரின் குடும்ப வாரிசுகள் 21 வயதுக்கு குறைவாக இருந்தால் அந்தக் குடும்பத்துக்கு தலைமைக் கழகத்தின் சார்பில் பத்து லட்ச ரூபாய் நிவாரண நிதியாக வழங்கப்படும்.

அந்தப் பிள்ளைகளின் படிப்பு, குடும்பச் சூழலுக்கு இந்த நிதி உதவும்” என்று அறிவித்திருந்தார்.அந்த வகையில், இறையனூரைச் சேர்ந்த திருமதி சரிதாம், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த முத்தமிழ்செல்வன், ஈரோடு மத்திய மாவட்டத்தைச் சேர்ந்த வே.சரவணன், திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த விக்னேஷ், கடலூர் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த குப்புசாமி, காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த கே.ஏ.ராம்பிரசாத் ஆகிய 6 குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கப்பட்டது.

அதனை தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் நாமக்கல் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த திமுக உறுப்பினர் சரண்ராஜ் , நாமக்கல் - சேந்தமங்கலம் சாலை, வீசாணம் பிரிவு ரோடு அருகில் வாகன விபத்தில் சிக்கியும், கடந்த மாதம் காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த திமுக உறுப்பினரான எஸ்.பிரகாசம், கீழ்அம்பி - காஞ்சிபுரம் சாலையில் இடதுபுறம் சென்றபோது வாகனம் மோதியும் சம்பவ இடத்திலேயே இவ்விரண்டு பேரும் உயிரிழந்து விட்டனர்.

விபத்தில் சிக்கி உயிரிழந்த மேற்சொன்ன இருவரின் குடும்ப நிவாரண நிதியாக, தலா ரூபாய் பத்து லட்சம் வீதம் ரூபாய் 20 லட்சத்திற்கான காசோலையினை, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நாமக்கல் கிழக்கு மாவட்டம் கு.சரண்ராஜ் மனைவி ராசாத்தியிடமும் - காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம் எஸ்.பிரகாசம் மனைவி பிரியாவிடமும் நேற்று காலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில் வழங்கினார்.

அப்போது பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணைப் பொதுச்செயலாளர் ராசா, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தித் தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் உடனிருந்தனர்.