*சீர்படுத்த கோரிக்கை
பொள்ளாச்சி : பொள்ளாச்சி-கோவை ரோட்டிலிருந்து பிரிந்து செல்லும் வடக்கிபாளையம் ரோட்டில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டது. ஆர்.பொன்னாபுரம், சி.கோபாலபுரம்,வடக்கிபாளையம், சூலக்கல்,நடுப்புணி,புரவிபாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் முக்கிய வழியாக உள்ளது. இதனால் மேம்பாலம் வழியாக, பகல் மற்றும் இரவு நேரத்தில் வாகன போக்குவரத்து உள்ளது.
தென்மேற்கு பருவமழை வலுத்த போது, மேம்பாலத்தின் சில இடங்களில் தார் ரோடு பெயர்ந்து பள்ளம் ஏற்பட்டது. இதையடுத்து, அப்பகுதிகள் அண்மையில் செப்பனிடப்பட்டது.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக, ரயில்வே மேம்பாலத்தில் வாகனங்கள் திரும்பும் பகுதியில் ஜல்லிக்கற்கள் பரவலாக சிதறி கிடக்கிறது.இதனால், அந்த வழியாக வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
அதிலும், சிலநேரத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் சறுக்கி கீழே விழுகின்றனர். இந்த மேம்பாலத்தில் மின்விளக்கு இல்லாததால்,இரவு நேரத்தில் வெளிச்சமின்றி இருள்சூழ்ந்த பகுதியாக உள்ளது.இதனால், இரவு நேரத்தில் வேகமாக செல்லும் இருசக்கர வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து விழுந்து விபத்துக்கள் அதிகமாக வாய்ப்புள்ளது.
எனவே, ரயில்வே மேம்பாலத்தில் விபத்து நேரிடும் அளவிற்கு பறந்து கிடக்கும் ஜல்லிகற்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.