மும்பை: பிரபல நடிகை காஜல் அகர்வால் சாலை விபத்தில் சிக்கியதாகப் பரவிய வதந்திக்கு, அவர் நலமுடன் இருப்பதாக பதிவிட்டு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற மொழித் திரைப்படங்களில் நடித்துள்ள நடிகை காஜல் அகர்வால், சாலை விபத்து ஒன்றில் சிக்கிப் படுகாயமடைந்ததாகவும், சிலர் அவர் உயிரிழந்துவிட்டதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் வேகமாகப் பரவின. இந்தத் தகவலைக் கண்ட அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும், அவர் நலம்பெற வேண்டியும், இந்த செய்தி போலியானதாக இருக்க வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் தங்களது கவலையைப் பதிவிட்டு வந்தனர்.
இந்த வதந்தி காட்டுத்தீ போலப் பரவி, இந்தியத் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ரசிகர்களின் கவலையையும், பரவி வரும் வதந்தியையும் அறிந்த நடிகை காஜல் அகர்வால், உடனடியாகத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதுகுறித்து விளக்கம் அளித்தார். தனது பதிவில், ‘நான் விபத்தில் சிக்கியதாக ஆதாரமற்ற செய்திகளைக் கண்டேன். கடவுளின் அருளால், நான் நலமுடனும், பாதுகாப்புடனும், மிகச் சிறப்பாகவும் இருக்கிறேன் என்பதை உங்கள் அனைவருக்கும் உறுதியளிக்க விரும்புகிறேன். இதுபோன்ற தவறான செய்திகளை நம்பவோ, பரப்பவோ வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
அதற்குப் பதிலாக, நமது கவனத்தை நேர்மறை மற்றும் உண்மையின் மீது வைப்போம்’ என்று அவர் தெரிவித்திருந்தார். அவரது இந்த விளக்கத்திற்குப் பின்னரே ரசிகர்கள் நிம்மதியடைந்தனர். காஜல் அகர்வால் தற்போது ‘தி இந்தியா ஸ்டோரி’ மற்றும் நிதேஷ் திவாரியின் பிரம்மாண்ட படைப்பான ‘ராமாயணம்’ உள்ளிட்ட பல முக்கியத் திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.